தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். சினிமா மட்டும் என இல்லாமல் பல்வேறு தொழில்களை தேடி தேடி முதலீடு செய்வதில் திறமையானவராக இருக்கிறார்.
நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நயன் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் பாகம் 2, ராக்காயி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இவை திரைக்கு வர இருக்கின்றன. நயன் தாராவை பொறுத்தவரை அவரது திரைத்துறை சார்ந்த தகவல்கள் மட்டுமல்ல தனிப்பட்ட முதலீடுகள் அனைத்துமே மக்களின் கவனம் பெறும்.

நயன்தாரா அண்மையில் சென்னையில் பிரபலமான ஒரு இடத்தில் வீடு வாங்கியது பேசு பொருளாக மாறி இருக்கிறது. சென்னையில் புகழ்பெற்ற பகுதி போயஸ் கார்டன். இந்த பேரை கேட்டால் சும்மா அதிருதில்ல என கூறும் அளவுக்கு பல பிரபலங்கள் வசிக்கும் இடம். இங்கே நயன்தாரா ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறார்.
போயஸ் கார்டனில் லெகசி என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள ஆடம்பர குடியிருப்பில் டியூப்லக்ஸ் முறையில் கட்டப்பட்டிருக்கும் அபார்ட்மெண்டினை வாங்கியுள்ளார். ஏற்கனவே போயஸ் கார்டனில் தனி மாளிகையே கட்டி இருக்கும் நயன்தாரா இப்போது கூடுதலாக ஒரு அபார்ட்மெண்டும் வாங்கி இருக்கிறார். 31.5 கோடி ரூபாயை கொடுத்து இந்த வீட்டினை அவர் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக போயஸ் கார்டன் திகழ்கிறது. இங்குதான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடும் இங்கு தான் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் தனுஷும் இங்கே பல நூறு கோடிக்கு வீடு கட்டி குடியேறினார்.ஏற்கனவே நயன் தனக்கு சொந்தமாக ஒரு மாளிகையை போயஸ் கார்டனில் கட்டியுள்ளார். இங்கே கணவர் விக்னேஷ் சிவனுக்காக தனி அலுவலகமும் கட்டி தந்துள்ளார். இந்நிலையில் அவர் 14,369 சதுர அடி சூப்பர் பில்டப் ஏரியா கொண்ட வீட்டினை வாங்கி இருக்கிறார்.
ஒரு சதுர அடி 21,946 ரூபாய் என விலை கொடுத்து வாங்கியுள்ளார். டிசம்பர் 15ஆம் தேதி லேண்ட்மார்க் மெட்ரோ ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த வீட்டினை நயன்தாராவுக்கு விற்பனை செய்து பத்திர பதிவு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புதிய குடியிருப்பில் நயனுக்கு 90% பங்கும், விக்னேஷ் சிவனுக்கு 10 சதவீத பங்கும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நயன்தாராவை பொறுத்தவரை ஹைதராபாத், சென்னை , கேரளா என பல ஊர்களில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகளையும் வாங்கி வைத்திருக்கிறார். விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகு சென்னையிலேயே செட்டிலாகி விட்டார். இதன் ஒரு பகுதியாகதான் முதலில் போயஸ் கார்டனில் பழைய வீடு ஒன்றை வாங்கி அதனை அனைத்து வசதிகளும் கொண்ட மாளிகையாக மாற்றினார். இந்நிலையில் மேலும் ஒரு வீட்டினை அவர் வாங்கியுள்ளார்.
நடிகர், நடிகைகள் மத்தியில் போயஸ் கார்டனில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இந்த பகுதியில் வீடு வாங்குவதை நடிகர் நடிகைகள் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறார்கள். இங்கே நிலத்தின் மதிப்பு அருகில் யாரெல்லாம் வசிக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் தீர்மானம் செய்யப்படுகிறது. பல்வேறு பிரபல தொழிலதிபர்கள் நடிகர்கள், விஐபிக்கள் போயஸ் கார்டனில் வசிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications