சென்னை: சர்வதேச அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இப்படி திடீரென பணி நீக்கம் செய்யப்படும் போது அந்த ஊழியருக்கு அது நிதி ரீதியாகவும் மனரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
உடனடியாக அடுத்த வேலையை தேடி ஆக வேண்டி இருக்கும், அதே வேளையில் அடுத்த வேலை கிடைக்கும் வரை தங்களுடைய செலவினங்களை பராமரிக்க வேண்டிய தேவை இருக்கும்.

எதிர்பாராத வகையில் திடீரென பணி நீக்கம் செய்யப்படும் போது அந்த நபர்கள் தங்களுடைய நிதி ரீதியான பொறுப்புகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் அளிக்கும் சில யோசனைகளை இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே வேலைக்கு செல்பவர்கள் தங்களிடம் எப்பொழுதும் அவசரகால நிதி என ஒன்றை உருவாக்கி வைத்திருக்க வேண்டும். திடீரென உடல்நிலை பிரச்சனை ஏற்படும் போது அல்லது இதுபோன்ற பணி நீக்கங்களின் போது அவசரகால நிதி மிகவும் உதவியாக இருக்கும்.
திடீரென நீங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தால் உங்களிடம் அவசரகால நிதியாக எவ்வளவு இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள். உங்களுடைய செலவினங்களை குறிப்பாக அத்தியாவசிய செலவினங்களை கையாள்வதற்கு இந்த தொகை போதுமானதாக இருக்குமா எத்தனை மாதங்களுக்கு இதை வைத்து குடும்பம் நடத்த முடியும் என்பன உள்ளிட்டவற்றை ஆராய்வது அவசியம்.
திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்ட நபர் முதலில் தன்னுடைய வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, தனக்கு கடனாக எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் போட வேண்டும் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள். வேலையை விட்டு அனுப்பக்கூடிய நிறுவனம் அதற்கான இழப்பீடாக ஏதேனும் தொகை வழங்குகிறதா, உங்களுக்கு பணிக்கொடை உள்ளிட்டவை ஏதேனும் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதா, அவ்வாறு இருந்தால் அதன் மூலம் எவ்வளவு பணம் வருகிறது மொத்தமாக நமது கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை கணக்கிட வேண்டும்.
இந்த பணத்தை கொண்டு வீட்டு வாடகை அல்லது இஎம்ஐ, அடிப்படை தேவைகளான மளிகை பொருட்கள், மின் கட்டணம் உள்ளிட்டவற்றை எத்தனை மாதம் சமாளிக்க முடியும் என்பதை பட்ஜெட் போட்டுக் கொள்வது நல்லது. உங்களுக்கு வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்ட கடன்கள் செலுத்த வேண்டியது இருந்தால் ஓரிரு மாதங்களுக்கு அல்லது அடுத்ததாக வேலை கிடைக்கும் வரை அந்த கடன் செலுத்துதலை தள்ளிப் போட முடியுமா அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா என்பது குறித்து உங்களுக்கு கடன் வழங்கிய நிறுவனத்திடம் சென்று உங்களுடைய சூழலை விளக்கி விவரங்களை தெரிந்து கொள்வது நல்லது.
தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது உதாரணமாக குடும்பத்தோடு வெளியில் செல்வது, பொழுதுபோக்கு செலவுகள் மற்றும் குறிப்பிட்ட செயலிகளுக்கான சந்தா கட்டணங்கள் , ஜிம்முக்கு செல்வது உள்ளிட்டவற்றை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு தனிப்பட்ட திறமைகள் உதாரணமாக எடிட்டிங், கிராஃபிக்ஸ் டிசைன், ப்ரோக்ராமிங், டேட்டா என்ட்ரி என்பன உள்ளிட்டவை தெரிந்தால் ஃப்ரீலேன்சிங் முறையில் வாய்ப்புகள் கிடைக்கிறது என்றால் முழு நேரமாக வேலை கிடைக்கும் வரை நீங்கள் அந்த அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக வேலைக்கு செல்வதற்கு இடைப்பட்ட அந்த காலத்தில் உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட தனிப்பட்ட திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அடுத்து செல்லக்கூடிய வேளையில் முந்தைய வேலையை விட அதிகபட்ச சம்பளம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு நிதி ரீதியாக நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை பார்ப்பது நல்லது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications