இத்தாலி: உலக பெரும் பணக்காரர்கள் விரும்பி பயன்படுத்தும் கார்களில் ஒன்று லம்போர்கினி. தங்கள் செல்வத்தை வெளிப்படுத்த பலரும் லம்போர்கினி வாங்கி வலம் வருவர். பல கோடிகள் என மதிப்பு கொண்டவை லம்போர்கினி கார்கள். எனவே உலகின் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமாக இது இருக்கிறது.
இத்தாலி நாட்டை சேர்ந்த சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்டோமொபைலி லம்போர்கினி. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய லோகோவை மாற்றி அமைத்துள்ளது.

லம்போர்கினி நிறுவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கொள்கைகள் காரணமாக லோகோ மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்ததை விட எழுத்து வடிவங்கள் மிக போல்டான முறையில் தெரியும் வகையில் புதிய லோகோ இருக்கிறது.
வழக்கம் போல காளை மாடும், தற்காப்பு கேடயமும் லோகோவில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதன் தோற்றத்தில் மற்றும் சற்றே மாறுபாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள், முதன்மையான வண்ணங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

மஞ்சள் மற்றும் தங்க நிறமும் லோகோவில் இடம்பிடித்துள்ளது. டிஜிட்டல் தளங்கள் மற்றும் வாகனங்களில் இன்னும் தெளிவாகவும் வசீகரமாகவும் தெரியும் வகையில் புதிய லோகோ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி விற்பனைக்கு வர இருக்கும் கார்களில் இந்த புதிய லம்போர்கினி லோகோவே இடம்பெறு உள்ளது. நிறுவனத்தின் விற்பனையகங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த மையங்களில் இனி புதிய லோகோவை மட்டுமே காண முடியும். உலக அளவில் பெரும் செல்வந்தர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படக் கூடியவை லம்போர்கினி நிறுவனத்தின் கார்கள். இந்த நிறுவனத்தின் அதிக விற்பனை செய்யப்பட்ட காராக இருப்பது உருஸ்.

சில நாட்களுக்கு முன்புதான் லம்போர்கினி நிறுவனம் ஒரு வருடத்தில் 10,000க்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. உலகின் முன்னணி நிறுவனமான லம்போர்கினி முதன்முறையாக ஓராண்டு காலத்தில் இத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது.
இதன் கார்களின் மதிப்பு பல கோடிகள் என்பதால் எண்ணிக்கை குறைவாக தோன்றினாலும் லாபம் என்பது அதிகமாகவே இருக்கும். 2023-24 ஆம் நிதி ஆண்டில் 266 கோடி யூரோ, கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 24 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாயை இந்நிறுவனம் ஈட்டியுள்ளது. லம்போர்கினி நிறுவனம் முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2023-24 ஆம் நிதியாண்டில் 12% அதிக வருவாயை பெற்றுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications