அதிவேகமும், அழகிய வடிவமைப்பும், தொழில்நுட்ப தன்மையும் என வாகனத் துறையில் தனிக்கென தனி இடத்தை பிடித்துள்ளது டோனினோ லாம்போர்கினி (Lamborghini) நிறுவனம். இத்தாலியை சேர்ந்த இந்நிறுவனம் தயாரிக்கும் கார்கள் சாதாரண வாகனங்கள் கிடையாது. அவை "சூப்பர் கார்கள்" என்று அழைக்கப்படும். ஏனென்றால், இந்த கார்கள் அதிக வேகத்துக்கும், பிரீமியம் வடிவமைப்புக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் பெயர் பெற்றவை.
இன்றைய நிலைப்படி, லாம்போர்கினி நிறுவனம் ஜெர்மனியைச் சேர்ந்த Audi மற்றும் Volkswagen குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, இந்நிறுவனம் தற்போது மின்சார மற்றும் ஹைப்ரிட் கார்களையும் உருவாக்கத் தொடங்கியிருக்கிறது. இது சுற்றுச்சூழலைக் பாதுகாக்கும் நோக்கில் எடுத்த முடிவு ஆகும்.

இந்த சூழலில் தான், இந்தியாவின் கினெடிக் க்ரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸ் லிமிடெட் (Kinetic Green Energy and Power Solutions Ltd) மற்றும் லாம்போர்கினி (Tonino Lamborghini SpA) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, புதிய பிரீமியம் மின்சார கார்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த மின்சார கோல்ஃப் மற்றும் லைஃப்ஸ்டைல் கார்கள், இத்தாலியில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை உலகளாவிய வாகன சந்தையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து நடத்திய மின்சார கார்களின் அறிமுக விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். புதிய மின்சார கோல்ஃப் மற்றும் லைஃப்ஸ்டைல் கார்களின் "ஜெனசிஸ் (Genesis)" மாடல், வாடிக்கையாளர்களை கவரும் விலையில் வெளிவந்துள்ளது. அதன்படி, ஜெனசிஸ் மாடலின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.60 லட்சம் ஆகும். அதுவே உயர்தர மாடலின் விலை சுமார் ரூ.12 லட்சம் ஆகும்.
இந்த காரில் பிரீமியம் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 2, 4, 6 மற்றும் 8 இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார்களை கோல்ஃப் விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள், பிரம்மாண்ட ரிசார்ட்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். இந்த கார்கள் புனே அருகேயுள்ள கினெடிக் க்ரீனின் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காரிலும், லாம்போர்கினியின் சின்னம் இடம்பெற்றிருக்கும்.
கினெடிக் க்ரீன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO டாக்டர் சுலஜா பிரோடியா மோத்வானி பேசுகையில், "கோல்ஃப் கார்களின் சந்தை வெறும் விளையாட்டு மைதானத்திற்கு மட்டுமின்றி, பல்வேறு துறைகளுக்கு விரிவடைந்துள்ளது. லாம்போர்கினியுடன் இணைந்து, நாங்கள் புதிய தயாரிப்பை மட்டுமல்லாமல், மின்சார லைஃப்ஸ்டைல் மோபிலிட்டியில் புதிய தரத்தை உருவாக்கி உள்ளோம். 2030ஆம் ஆண்டுக்குள், 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள EV நிறுவனம் ஆகும் என்ற எமது கனவை இது வெளிப்படுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
உலக மின்சார கோல்ஃப் மற்றும் லைஃப்ஸ்டைல் கார்களின் சந்தை தற்போது சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 30 நாடுகளில் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications