தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் என்றால் அது கோவை தான். கோவை மாநகரை பொறுத்தவரை அதிவேகமாக வளர்ந்து வரும் தென்னிந்திய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. கோவை மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு இருக்கும் நிலையில் கோவை மாவட்டத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று கடந்த 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது

ஏனென்றால், கோவையில் அடுத்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனை எதிர்கொள்ளும் வகையில் கோவையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கு அரசும் தயாராகி வருகிறது. இதன்படி கோவையின் முக்கிய வழித்தடங்களான அவிநாசி ரோடு, சத்தி ரோடு என இரு வழித்தடங்களில் 34.8 கி.மீ., துாரத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. முதல் வழித்தடம் உக்கடம் பஸ் நிலையத்தில் துவங்கி, நகர விமான நிலையம் வழியாக நீலம்பூர் ஒருங்கிணைந்த நிலையம் வரை அமைய இருக்கிறது.
இரண்டாவது வழித்தடம், கோவை ரயில் நிலையத்தில் துவங்கி சத்தி ரோட்டில் வலியம்பாளையம் பிரிவு வரை 14.4 கி.மீ., தூரம் வரை அமைய இருக்கிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக நிலம் எடுப்பதற்காக, 154 கோடி ரூபாயை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அண்மையில் ஒதுக்கீடு செய்திருந்தது. இதையடுத்து கடந்த மாதம் காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, தற்போது உக்கடம் அருகே 40 கி.மீ நீலத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதேபோல் உக்கடம் பேருந்து முனையத்தில் இருந்து பிலிச்சி மேட்டுப்பாளையம் சாலை வழியாக சாய்பாபா காலனி பேருந்து நிலையம் துடியலூர் வரை மஞ்சள் வழித்தடம் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
காரணம்பேட்டையில் தொடங்கி தண்ணீர் பந்தல் வரை திருச்சி சாலை, தடாகம் சாலை வழியாக சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம் வழியாக நீல வழித்தடம் மெட்ரோ ரயில் இயக்கப்படும். நல்லூர் வயல் பகுதியில் தொடங்கி கணேசபுரம் வரை சக்தி சாலை, சிறுவாணி சாலை, வழியாக பேரூர், காந்திபுரம், மத்திய பேருந்து நிலையம், சரவணம்பட்டி வழியாக பச்சை வழித்தடம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். உக்கடம் பேருந்து முனையத்தில் தொடங்கி கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வரை செட்டிபாளையம் சாலை போத்தனூர் சந்திப்பு வழியாக இளஞ்சிவப்பு வழித்தடம் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications