பெங்களூரு: செல்லப் பிராணிகளை வைத்திருக்கக் கூடாது என வீட்டு உரிமையாளர்களோ அல்லது குடியிருப்பாளர் சங்கங்களோ கூற முடியாது என பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் வாடகைக்கு வீடு கிடைப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சொந்த குடியிருப்பாக இருந்தாலும் நிம்மதியாக செல்லப் பிராணிகளை வளர்க்க முடிவதில்லை.
வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள் இதுபோல வீடுகளில் செல்லப் பிராணிகளை வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அப்படியே அனுமதி அளித்தாலும் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றனர். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகமான பிபிஎம்பி சார்பில் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியாகி உள்ளன.

செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் சார்பாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கக்கூடாது, பொதுவான இடங்களில் செல்லப் பிராணிகளை அழைத்து வரக்கூடாது , லிஃப்டுக்குள் செல்ல பிராணிகளை அழைத்து வரக்கூடாது என்பன போன்ற தடைகளை இனிமேல் விதிக்க முடியாது.
பெங்களூரில் வசிக்கும் அனைத்து குடிமகன்களுக்கும் அவர்கள் விருப்பத்திற்கு உகந்த செல்லப்பிராணியை தேர்வு செய்து வளர்ப்பதில் அனைத்து உரிமையும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொது நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தெருவில் வசிக்கும் விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீருக்கான வசதிகளை செய்து தர வேண்டியது அவசியம் என பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
குடியிருப்போர் நலச் சங்கங்கள், செல்லப்பிராணிகளை வளர்ப்போருடன் பேச்சுவார்த்தை நடத்தி காலை மற்றும் மாலை நேரங்களில் அவற்றை பொது இடங்களுக்கு அழைத்து வருவதற்கான நேரத்தை குறிப்பிட்டு முடிவு செய்து கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் நாய், பூனை போன்றவற்றை குச்சிகளைக் கொண்டு விரட்டி அடிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதாவது இரவு 11:30 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை பொது இடங்களில் விலங்குகளுக்கு உணவு வழங்கக் கூடாது. மேலும் சமைக்காத கறி மற்றும் பிஸ்கட் போன்றவற்றை நாய்களுக்கு உணவாக வழங்கக் கூடாது. எலி தொல்லைகள் வராமல் இருக்க மீதமாகும் உணவுப் பொருட்களை பொது இடங்களில் வைத்து விட்டு செல்லக்கூடாது என்பன உள்ளிட்டவை அதில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications