டெல்லி: பிரதமர் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் (PM internship scheme) கீழ் இணைந்திருக்கும் நிறுவனங்கள் இதன் கீழ் தங்கள் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிக்காக தேர்வு செய்யும் நபர்களுக்கு கூடுதல் தொகையை ஸ்டை ஃபண்டாக வழங்க முன் வந்துள்ளன.
கடந்த பட்ஜெட்டின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தின் படி ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு நாட்டின் முன்னணி 500 நிறுவனங்கள் அதில் பதிவு செய்யப்படும் என்றும் இந்த 500 நிறுவனங்களிலும் 10 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 3ஆம் தேதி இந்த வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்திற்கான இணையதளம் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.

நவம்பர் 15ஆம் தேதி வரை மாணவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பயிற்சிக்காக இதில் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலவரப்படி இந்த இணையதளம் வாயிலாக 6,20,000 வேலைவாய்ப்பு பயிற்சி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை பெரு நிறுவனங்கள் 1.20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்குவதற்கு முன் வந்துள்ளன.
தற்போது 280 நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன. 28 துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இதில் இருப்பதாகவும் கூடிய விரைவில் 220 நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க முன் வந்திருப்பதாகவும் மத்திய அரசு வெளியிடும் தகவல் தெரிவிக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் ,ஹெச்டிஎஃப்சி வங்கி, மாருதி சுசூகி, எல்&டி ,மகேந்திரா & மகேந்திரா, ஜூபிலண்ட் ஃபுட்வொர்க், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த திட்டத்தில் ஏற்கனவே இணைந்துள்ளன.
பொதுவாக இந்த பெரிய நிறுவனங்கள் எல்லாம் அவர்களாகவே ஒரு நபரை வேலை வாய்ப்பு பயிற்சிக்காக எடுக்கும்போது அவர்களுக்கு குறைந்தபட்சம் 19 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஸ்டை ஃபண்டு வழங்குகின்றன. ஆனால் மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் படி வேலை வாய்ப்பு பயிற்சிக்காக சேரும் நபருக்கு மத்திய அரசு மாதம் தோறும் 5000 ரூபாயும் ஒருமுறை உதவி தொகையாக 6000 ரூபாயும் வழங்குகிறது.
மத்திய அரசு ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறது, இந்த நபர்களை வேலைவாய்ப்பு பயிற்சிக்காக தேர்வு செய்யக்கூடிய நிறுவனங்கள் ஒரு நபருக்கு 6000 ரூபாயை ஓராண்டுக்கு செலவிட வேண்டி இருக்கிறது. இதனிடையே சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் நேரடியாக ஒருவரை இவ்வாறு வேலை வாய்ப்பு பயிற்சிக்காக தேர்வு செய்தால் எவ்வளவு ஊதியம் வழங்குவோமோ அதை இவர்களுக்கும் வழங்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளன.
இதன் மூலம் வேலை செய்யும் இடத்தில் ஊதியத்தால் எந்த இடைவெளியும் இருக்காது என பெரிய நிறுவனங்கள் தெரிவிக்கின்றனவாம். அந்த வகையில் மத்திய அரசின் பிரதமர் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தவர்களுக்கு நல்ல ஸ்டை ஃபண்ட் கிடைப்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications