பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர்களின் இடம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும், நீண்ட காலமாக டெக் உலகின் மூத்த தலைவர்கள் டாப் 5 இடங்களை பெரும்பாலும் ஆட்டிப்படைத்து வரும் வேளையில், 2019க்கு பின்பு ஆடம்பர பிராண்டான LVMH நிறுவனத்தின் தலைவப் பெர்னார்ட் அர்னால்ட் டாப் 5 இடத்தில் நுழைந்தார். பெர்னார்ட் அர்னால்ட் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.
ஆனால் கடந்த ஒரு வருடமாக ஏஐ, டேட்டா, சைபர் செர்யூரிட்டி என பல தொழில்நுட்பம் சர்வதேச வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்திருந்த நிலையில் மீண்டும் டெக் தலைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

ஒராக்கிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான லாரி எல்லிசன் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக முதல் முறையாக உயர்ந்துள்ளார். புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் அறிக்கையின்படி, அவரது சொத்து மதிப்பு 251.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
ஒராக்கிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் உயர்ந்ததால் லேரி எலிசன் சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு உயர்ந்து தற்போது உலகின் 2வது பெரும் பணக்காரராக உயர்ந்துள்ளார்.
ஒராக்கிள் நிறுவன பங்குகள் செயற்கை நுண்ணறிவு (AI) துறை வளர்ச்சி அடைய துவங்கியதில் இருந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ChatGPT பொது மக்களுக்கு நவம்பர் 2022-ல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில், ஏப்ரல் இறுதியிலிருந்து 90%க்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்த அதிரடியான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஒராக்கிள் நிறுவனத்தின் கிளவுட் கம்பியூட்டிங் சேவை தான், உலகம் முழுவதும் கிளவுட் கம்பியூட்டிங் சேவைக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் தற்போது ஒராக்கிள் நிறுவன சேவைகள் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது.
செவ்வாய்க்கிழமை, அமெரிக்க அரசு நவிடியா கார்ப்பரேஷன் மற்றும் அட்வான்ஸ்ட் மைக்ரோ டிவைஸஸ் இன்க் உள்ளிட்ட சில செமிகண்டக்டர் உற்பத்தியாளர்களுக்கு சீனாவுக்கு சில செமிகண்டக்டர்களை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த செய்தியால் ஒராக்கிளின் பங்குகள் 5.7% உயர்ந்தன.
இதன் விளைவாக, 80 வயதான லாரி எலிசன் புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். லாரி எலிசன் சொத்து மதிப்பில் 80%க்கும் மேல் ஒராக்கிள் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications