அமெரிக்கா: உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் தேடுபொறியாக கூகுள் செயல்படுகிறது. இந்த கூகுள் நிறுவனத்திற்கு அடித்தளமிட்டது லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் தான்.
இவர்களில் கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். 2019ஆம் ஆண்டிலேயே கூகுளை விட்டு வெளியேறி விட்டார் லாரி பேஜ். இத்தனை ஆண்டுகள் அவர் என்ன செய்கிறார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் ஏஐ தொடர்பான ஒரு ஸ்டார்ட் அப்பை உருவாக்கி வருவது தெரிய வந்துள்ளது.

லாரி பேஜ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு புதிய தயாரிப்புகளை கொண்டு வரும் வகையிலான Dynatomics என்ற ஸ்டார்ட் அப்பை தொடங்கியுள்ளார். பல்வேறு துறைகளிலும் ஏஐ தாக்கம் அதிகரித்துவிட்ட நிலையில் , ஏஐ மூலம் புதிய தயாரிப்புகளை கொண்டு வரும் நிறுவனமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.
தி இன்பர்மேஷன் என்ற தளம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் பார்க்கும்போது லாரி பேஜால் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய ஏஐ ஸ்டார்ட் அப் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களின் மிகவும் உகந்த வடிவமைப்புகளை உருவாக்குமாம். அதாவது இந்த ஏஐ தயாரிப்புகளை கொண்டு நாம் எளிதாக புதிய புதிய பொருட்களை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய முடியும் என சொல்லப்படுகிறது.
தற்போதைக்கு கிரிஸ் ஆண்டர்சன் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிபுணர்கள் Dynatomics நிறுவனத்தில் பணியில் இருப்பதாக செய்யப்படுகிறது. அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களும் முன்னாள் தகவல் தொழில்நுட்ப நிறுவன தலைவர்களும் செயற்கை நுண்ணறிவு திறனை அடிப்படையாகக் கொண்ட புதிய புதிய நிறுவனங்களையும் தயாரிப்புகளையும் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர் .
ஆர்பிட்டல் மெட்டீரியல் என்ற நிறுவனம் பேட்டரி மற்றும் கார்பன் டை ஆக்சைடு கொண்ட செல்களை தயாரிப்பதற்கான புதிய பொருட்களை கண்டறிவதற்கான ஒரு ஏஐ தளத்தை உருவாக்கி வருகிறது. அதேபோல பிசிக்ஸ் என்ற நிறுவனம் வாகன உற்பத்தி மற்றும் விமான பாகங்களை தயாரிக்க கூடிய தொழிற்சாலைகளுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு திறனை அடிப்படையாகக் கொண்ட ஒரு தயாரிப்பை வடிவமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.
அடுத்தடுத்த மாதங்களில் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு ஏஐ அடிப்படையிலான தயாரிப்புகளை நாம் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே அமெரிக்காவின் ஓபன் ஏஐ நிறுவனத்தால் தொடங்கப்பட்ட சாட் ஜிபிடி நிறுவனம் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்திவிட்டது. அண்மையில் சீனா அறிமுகம் செய்த டீப்சீக் செயலி மேலும் ஒரு ஏஐ பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications