கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப் படைத்தது. இந்த கொரோனா தொற்றால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
இந்த பொது முடக்கம் காரணமாக பல்வேறு ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த சமயத்தில் பல்வேறு ஊழியர்களின் வேலையும், தொழிலும் பறிபோனது. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கின. பின்னர், தடுப்பூசி, முழு ஊரடங்கு ஆகியவற்றால் கொரோனா பெருந்தொற்று பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள், அலுவலகத்திற்கு வந்து பணியாற்றலாம் என அந்தந்த நிறுவனங்கள் அறிவித்தன. ஆனால், தற்போதும் கூட சில நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர். ஏனென்றால், கொரோனா சமயத்தில் வீட்டிலிருந்து பழகியவர்கள், மீண்டும் அலுவலகத்திற்கு வர மறுக்கின்றனர். மேலும், இது குடும்பத்துடன் செலவிட அதிக நேரம் கிடைப்பதாகவும், குறிப்பாக நேரமும், செலவும் மிச்சப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
ஆனால், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு சில வாய்ப்புகளை வழங்கியது. அதாவது, வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது ஊழியர்களுக்கு அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் எனக் கூறியது. ஆனால், இதை பெரும்பாலான ஊழியர்கள் பின்பற்றாமல், வாரம் முழுவதும் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.
இந்த சூழலில் தான், தற்போது கூகுள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தொலைதூரப் பணிகளுக்கு எதிராக கூகுள் கடுமையான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது. அதாவது, வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால், வேலையை விட்டு மொத்தமாக வீட்டிற்கே அனுப்பி விடுவோம் என்றும் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது நிறுவனத்தின் எதிர்கால வேலைகளில் முழு கவனம் செலுத்துவதற்காக வழங்கப்படும் தேர்வாகும். இதை சில குழுக்களில் ஏற்கனவே பயன்படுத்தி நேர்மறையான விளைவுகள் காணப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார். அதேபோல், கூகுளின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி மற்றும் அதனைச் சார்ந்த மாற்றங்கள் அதிகம் நிலவி வரும் நிலையில், நிறுவனத்தில் உள்ள ஊழியர்களும் அதனுடன் இணைந்தும், ஒத்துழைப்புடனும் பணியாற்றுவது அவசியமாகியுள்ளது. அதிலும், அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதால், அந்த வேலை சிறப்பாகவே நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு, ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கூகுள், ஊழியர்களை வேலையில் இருந்து வெளியேற்றிய வரலாறும் உண்டு. கடந்த 2023ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம், உலகளாவிய அளவில் சுமார் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. இந்த முறை எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கூகுளின் நோக்கம் அதிகமான ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும், இல்லையெனில் வேலையை விட்டு வீட்டிற்கே செல்ல வேண்டும் என்பதாகும்.


Click it and Unblock the Notifications