ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இன் மனைவி லாரன் பவெல் ஜாப்ஸ் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் மகா கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. கங்கா, யமுனா, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜில் இருக்கும் திருவேணி சங்கமத்தில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்களுக்கு மகா கும்பமேளா நிகழ்ச்சி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இந்த கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இன் மனைவியும் கோடீஸ்வரருமான லாரன் பவெல் ஜாப்ஸ் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் கும்பமேளாவின் ஒரு பகுதியாக நடைபெறும் கல்பவாஸ் என்ற பாரம்பரிய ஹிந்து நிகழ்விலும் கலந்து கொள்ள இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்காக ஜனவரி 13ஆம் தேதி பிரயாக்ராஜுக்கு வருகை தரும் லாரன் பவெல் ஜாப்ஸ் அங்கிருக்கும் மகா மண்டலகேஸ்வர சுவாமி கைலாசநாதர் முகாமில் தங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பவெல் ஜாப்ஸ் ஜனவரி 29ஆம் தேதி வரை கல்பவாஸில் கலந்து கொள்வார் என்றும் இதற்காக கும்பமேளா நடைபெறும் இடத்திலேயே தங்குவார் என்றும் சொல்லப்படுகிறது. அங்கே நடைபெற இருக்கக்கூடிய பல்வேறு சடங்குகளில் அவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
திரிவேணி சங்கமத்திலும் அவர் நீராட இருக்கிறார். கும்பமேளாவின் மிக முக்கியமான நிகழ்வாக கல்பவாஸ் பார்க்கப்படுகிறது. இது ஒரு இந்து பாரம்பரிய நிகழ்வாகும். மகாபாரதம் மற்றும் ராம் சரிதமனாஸ் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிகழ்வு இது.
பவுஸ் பூர்ணிமா முதல் மார்க் பூர்ணிமா வரையிலான காலம் கல்பவாஸ் காலம் என சொல்லப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் கல்பவாஸ் செய்பவர்கள் மூன்று நதிகள் சங்கமிக்கும் பகுதியில் எளிய கூடாரம் அமைத்து தங்க வேண்டும். தங்களின் சுகபோக வாழ்க்கையை துறந்து விரதம் இருக்க வேண்டும். தினம் தோறும் அவர்கள் கங்கை நதியில் ஸ்நானம் செய்து கீர்த்தனைகள் பாடி மகான்களின் உபதேசங்களை கேட்பார்கள். அப்போது ஆன்மீகம் தொடர்பான தேடல்களும் புரிதல்களும் விரிவடையும் என சொல்லப்படுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காகத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் இன் மனைவி இந்தியாவிற்கு வருகை தருகிறார். எனவே மகா கும்பமேளா நிகழ்வு உலக கவனம் பெறும் நிகழ்வாக மாறி இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications