சில காலமாக ஐடி துறையில் நடக்கும் பணிநீக்கம் பல ஊழியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு வித பயத்திலேயே தங்களுடைய பணிக் காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றனர். "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்றார் நாமக்கல் கவிஞர். அவருடைய வார்த்தை தற்போது ஐடி துறைக்கு கணக் கச்சிதமாக பொருந்தியுள்ளது. ஒருவேளை பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டால் வேறு ஏதேனும் வேலையை தேடியே ஆக வேண்டும் அல்லது சுய தொழிலாவது தொடங்க வேண்டும் என்பதற்காக இப்பொழுதே சிலர் திட்டமிட தொடங்கிவிட்டனர்.
IT நிறுவனங்கள் தங்கள் செயல்முறையை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பத்திற்கு மாற்றி வருகின்றன. இதுவும் IT நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுப்பதற்கு ஒரு காரணமாக மாறியுள்ளது. இதனால் பல ஐடி ஊழியர்கள் தங்களுடைய குடும்பத் தொழில்களுக்கு மாறி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் 2026-ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐடி நிறுவனங்கள் தங்கள் செயல்முறைகளை AI தொழில்நுட்பத்திற்கு மாற்றும்போது பிரஷர்கள் மற்றும் மிடில் லெவல் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை நன்றாக புரிந்து கொண்டு அவற்றை தெளிவாக பயன்படுத்தத் தெரிந்த சீனியர் ஊழியர்களை மட்டுமே விரும்பி பணியமர்த்த தொடங்கியுள்ளன. சமீபத்தில் அமேசான், காக்னிசன்ட் மற்றும் ஆரக்கிள் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை குறைத்த செய்தியை பார்த்தோம். தற்போது சிஸ்கோ நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இணைந்துள்ளது. 2026-ஆம் ஆண்டில் இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவில் ஊழியர்களை குறைக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால், மக்கள் அது தொடர்பான கருத்துக்களை சமூக ஊடக தளங்களில் பகிரத் தொடங்குவார்கள். அப்படித்தான் 23 வயதான இளம் IT ஊழியர் ஒருவர், "திடீரென IT நிறுவங்கள் வேலையை விட்டு தூக்கினால் எப்படி தப்பிப்பது? என்னிடம் பேக்கப் பிளான் எதுவுமே இல்லையே" என்று ஒரு கேள்வியை பதிவிட்டிருந்தார். இவருடைய ஒரு கேள்வி இந்திய டெக்கிகளிடம் காட்டுத்தீ போல பரவத் தொடங்கியது.
அந்த IT ஊழியரைப் போலவே நமக்கும் இதே போன்ற நிலை வரலாம் என்று அப்போது தான் பல ஊழியர்கள் உணரத் தொடங்கினர். அதில் சிலர் கூறிய பதில் தான் மிகவும் சுவாரசியமாக இருந்தது. சில டெக்கிகள் குடும்பத் தொழில்களான மளிகை கடை, டீக்கடை அல்லது துணிக்கடை போன்றவற்றை வைத்துக்கொண்டு எதிர்காலத்தை ஓட்டப் போவதாக வெளிப்படையாகக் கூறியிருந்தனர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? முதல் பட்டதாரியாக இருந்து கார்ப்பரேட் வேலைக்குள் நுழைந்த பலருக்கும் இன்னமும் அவர்களுடைய குடும்பத் தொழில் தான் ஆபத்து காலங்களில் கை கொடுக்கிறது. இப்படி பணிநீக்கம் ஒரு பக்கம் இருக்க, இன்னும் சில ஊழியர்கள் நிம்மதிக்காக லட்சங்களில் சம்பாதிக்கும் வேலையை ரிசைன் செய்வதையும் பார்க்கிறோம். என்னதான் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் தென்பட்டாலும் சைபர் செக்யூரிட்டி போன்ற விஷயங்களுக்கு கண்டிப்பாக மனிதத் தலையீடல்கள் அவசியம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே ஐடி துறையில் பணிபுரிபவர்கள், நிறுவனங்கள் எப்படி மாறுகிறதோ? அதேபோல காலத்திற்கு ஏற்ப தங்களுடைய ஸ்கில் செட்டையும் மாற்றிக்கொள்ள வேண்டும். ஐடி துறைகளில் அவ்வப்போது நடக்கும் மாற்றங்கள் புதிதல்ல. அதற்கேற்ப உங்களுடைய திறமையை அதிகரித்து கொண்டால், இது போன்ற சூழ்நிலையிலும் எளிதில் தப்பிக்க முடியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications