அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற உடனே டிரம்ப் ஹெச்1பி விசா நடைமுறையில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வருவார் என சொல்லப்படுகிறது. இதனால் ஹெச்1பி விசாவுக்காக விண்ணப்பம் செய்து காத்திருப்பவர்களும் தங்கள் ஊழியர்களை ஹெச்1பி விசா மூலம் வேலைக்கு எடுத்துள்ள அமெரிக்க நிறுவனங்களும் தற்போது கலக்கத்தில் உள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டில் இருக்கும் திறன் மிகுந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்த ஹெச்1பி விசாவையே பயன்படுத்துகின்றன. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் பலரும் ஹெச்1பி விசா மூலமாகத்தான் அமெரிக்காவில் வேலை செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவி ஏற்றவுடன் குடியேற்ற கொள்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வருவார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் ஹெச்1பி ஸ்பான்சர்ஷிப்பை 2024 ஆம் ஆண்டில் பெருமளவில் குறைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடியேற்ற துறை சார்பாக வெளியிட்டுள்ள தரவின் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் ஹெச்1பி ஸ்பான்ஸர்ஷிப்பை குறைத்துவிட்டன.
அமேசான் நிறுவனம் அதிகபட்சமாக 9,265 பேருக்கு ஹெச்1பி விசா ஸ்பான்ஸர்ஷிப் வழங்கியுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் 8,140 பேருக்கும் காக்னிசெண்ட் நிறுவனம் 6320 பேருக்கும் வழங்கியுள்ளது. கூகுள் 5364 பேருக்கும், டிசிஎஸ் நிறுவனம் 5274 பேருக்கும்,மெட்டா 4844 பேருக்கும் ஹெச்1பி விசாவை ஸ்பான்சர் செய்துள்ளது. மைக்ரோசாபட் நிறுவனம் 4725 பேருக்கும் ,ஆப்பிள் 3873 பேருக்கும் ,ஹெச் சி எல் அமெரிக்கா 2953 பேருக்கும், ஐபிஎம் 2906 பேருக்கும் செய்துள்ளது.
இதில் அமேசான் கடந்த ஆண்டு 11,000க்கும் அதிகமான ஹெச்1பி விசா ஸ்பான்ஸர்ஷிப் செய்ததாம், இன்போசிஸ் ,டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களும் ஸ்பான்ஸரை குறைத்துவிட்டனவாம்.
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை, செயற்கை நுண்ணறிவு, அமெரிக்கர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற விதிமுறை, லாட்டரி சிஸ்டத்தின் ஸ்திரத்தமற்ற தன்மை, ரிமோட் வேலைகளுக்கு மாறியது, ஊழியர்கள் பணி நீக்கம், நிறுவன மறுகட்டமைப்புகள், டிரம்ப் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க போகும் என்ற அச்சம் ஆகியவை தான் டெக் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு காரணமாம்.
இதனால் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்கா சென்றுவிடலாம் என்ற கனவில் இருக்கும் இந்திய டெக் ஊழியர்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றனர். 2023ஆம் ஆண்டில் மொத்தம் அமெரிக்காவில் 3,86,000 ஹெச்1பி விசா வழங்கப்பட்டது. இதில் 2,79,000 அதாவது 72.3% இந்தியர்களே ஹெச்1பி விசா பெற்றனர். சீனாவை சேர்ந்தவர்கள் 11.7% ஹெச்1பி விசா பெற்றனர்.


Click it and Unblock the Notifications