பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா சமீப காலமாக அதிகமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகிறது. இன்று கூட அதிகாலை 4 மணிக்கு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் அளித்திருக்கிறது.
மெட்டா நிறுவன ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என மன உளைச்சலில் இருக்கின்றனர். இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மார்க் ஜுக்கர்பெர்க் பேசியதாகக் கூறப்படும் ஒரு ரகசிய ஆடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் முன்பு மெட்டா செய்த தில்லாலங்கடி வேலையும் அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மெட்டா நிறுவனம், ஊழியர்களின் கணினிகளில் ஒரு புதிய கண்காணிப்பு மென்பொருளை இன்ஸ்டால் செய்துள்ளது. இந்த மென்பொருள் ஊழியர்கள் மவுஸை (Mouse) எப்படி நகர்த்துகிறார்கள், எங்கு கிளிக் செய்கிறார்கள் மற்றும் கீபோர்டில் என்ன டைப் செய்கிறார்கள் (Keystrokes) போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து பதிவு செய்கிறது.
இது குறித்து ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று நிறுவனத்தின் ஆலோசனை கூட்டத்தில், ஊழியர் ஒருவர் கேள்வி எழுப்பியதும் அதற்கு மார்க் அளித்த பதிலும் தற்போது ஆடியோவாக லீக் ஆகி இருக்கிறது. அப்போது ஒரு ஊழியர் "எதற்காக எங்களை இப்படி கண்காணிக்கிறீர்கள்?" என்று மார்க்கிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த மார்க், தற்போது ஏஐ மாடல்கள் மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்கள் வேலை செய்வதைப் பார்த்துதான் கற்றுக் கொள்கின்றன, நிறுவன ஊழியர்கள் புத்திசாலிகள், எனவே, அவர்கள் எப்படி Coding எழுதுகிறார்கள், எப்படி கணினியைப் பயன்படுத்திப் பிரச்சினைகளைத் தீர்க்கிறார்கள் என்பதைப் பார்த்து ஏஐ சிஸ்டம் கற்றுக்கொண்டால், அது மிக வேகமாகத் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் என கூறியுள்ளார்.
ஏஐக்கு திறமையான மனிதர்களின் செயல்பாடுகளை கொண்டு பயிற்சி தருவதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ளார். இதனால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் வேலைத் திறனை வைத்தே ஏஐ-க்கு பயிற்சி கொடுத்துவிட்டு, கடைசியில் அதே ஏஐ-யைக் கொண்டு மனிதர்களை வேலைநீக்கம் செய்ய மார்க் திட்டமிடுகிறார்" என்று ஊழியர்களும் நெட்டிசன்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இது தங்களது தனிமனித உரிமை மற்றும் தனியுரிமைக்கு எதிரானது என்றும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால் மார்க் தரப்பிலோ, மெட்டா தரப்பிலோ இந்த ஆடியோ குறித்தோ ஊழியர்கள் டிராக் செய்யப்படுவது குறித்தோ எந்த விளக்கமும் தரப்படவில்லை.


Click it and Unblock the Notifications

