பொதுவாக ஒரு வேலைக்கு சேர்ந்தால் ஓராண்டாவது அந்த வேலையில் நீடிக்க வேண்டும் என கூறுவார்கள். இல்லையெனில் பொறுப்பற்றவர், நம்பகத்தன்மையற்றவர், பொறுமையற்றவர் என பல பெயர்களுக்கு ஆளாக நேரிடும் என கூறப்படுவதுண்டு.
இதனால் பலர் ஒரு வேலையில் சேர்ந்தால் , பிடிக்கவில்லை என்றால் கூட ஓராண்டுக்காவது அந்த வேலையில் இருப்பார்கள். உண்மையில் ஒரு வேலையில் சேர்ந்து ஓராண்டு காலத்திற்குள் அந்த வேலையை விடுவது சரிதானா? என்பது குறித்து நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து தரும் வால்சந்த பீப்பில் ஃபர்ஸ்ட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் பல்லவி ஜா கூறியவற்றை இங்கே காணலாம்..

நீங்கள் சேர்ந்த வேலை, உங்களுக்கு எந்த வளர்ச்சியையும் தரவில்லை அல்லது பணிச்சூழல் ஆரோக்கியமானதாக இல்லை, இதனால் உங்கள் மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது எனில் அந்த வேலையை உடனே விட்டுவிடுவது தான் சரி என்கிறார் பல்லவி ஜா. இதன் மூலம் நமக்கான பணி வாய்ப்புகள் போய்விடும் என நினைப்பது தவறு என்கிறார்.
முற்போக்கு சிந்தனை கொண்ட தொழில் வல்லுநர்கள் குறுகியகால வேலைவாய்ப்புகளை நீண்ட கால தொழில் வளர்ச்சிக்கான ஒரு உத்தியான முதலீடாக ஏற்றுக் கொள்கிறார்கள் என சுட்டிக்காட்டும் ஜா, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை பணியிடங்களில் பொதுவானதாகி வருவதால், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மையமாக கொண்டு குறுகிய காலத்தில் பணி மாறுதல் என்பது திறன்களை வளர்க்க உதவும் என கூறுகிறார்.
பணி மாறுதல் மூலம் , குறிப்பிட்ட திறன்களை வளர்ப்பது, நிறைய மனிதர்களின் தொடர்பை பெறுவது மற்றும் சரியாக செயல்படுவதை உறுதி செய்வது ஆகிய பலன்கள் கிடைக்கும் எனில் நிச்சயமாக ஓராண்டிலேயே பணி மாறுவது சிறந்த முடிவு தான் என தெரிவிக்கிறார்.
பொதுவாக இதுபோல அடிக்கடி வேலையை மாற்றிக் கொள்பவர்கள் அர்ப்பணிப்பு இல்லாதவர்கள், நிலையற்றவர்கள் என முதலாளிகள் கருதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனக் கூறும் ஜா, அடிக்கடி வேலை மாற்றுவது உங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை உருவாக்கக்கூடும், எனவே வேலை மாறுதலுக்கான காரணம் என்பது திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இருந்தால் இந்த சவாலை எளிதாக எதிர்கொள்ளலாம் என விளக்கம் தருகிறார்.
வருமானம் இழப்பு, சலுகைகள் கிடைக்காமல் போவது, கடன்கள் பெறுவதில் சிக்கல்கள் ஆகிய நடைமுறை சிக்கல்களும் இதனால் ஏற்படக்கூடிய சவால்கள் என கூறும் ஜா, ஒரு பணியில் ஓராண்டுக்குள் இருந்து விலகுவதால் ஒரு உணர்வு ரீதியான பாதிப்பு மற்றும் தொழில் முறை நெட்வொர்க்கை மீண்டும் உருவாக்குவதில் தடுமாற்றம் ஆகிய பிரச்னைகளும் ஏற்படும் என்கிறார்.
எனவே ஒரு வேலையில் சேர்ந்து ஓராண்டு காலத்திற்குள் அந்த வேலையை விடுகிறீர்கள் என்றால், அதன் நோக்கம் புதிய திறன்களை வளர்ப்பது, தொழில்ரீதியான முன்னேற்றம் ஆகியவையாக இருக்க வேண்டும் என கூறுகிறார். ஒரு வேலையில் சேர்ந்து குறுகிய காலமே ஆகி இருந்தாலும் அதில் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை ஆய்வு செய்வது முக்கியம் , இது நீங்கள் வேலை தேடும் போது உதவியாக இருக்கும் என்கிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications