இன்றெல்லாம் மக்களின் பர்ஸ்களில் பணம் இருக்கிறதோ? இல்லையோ? ஆனால் கிரெடிட் கார்டு கண்டிப்பாக இருக்கிறது. கிரெடிட் கார்டை வாங்கிக் கொண்டு செலவு செய்து விட்டு பிறகு கட்டிக் கொள்ளலாம் என்கிற வசதியின் காரணமாகவே ஆபத்துக்கு உதவும் உற்ற நண்பனாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. கிரெடிட் கார்டை மட்டும் சரியாக பயன்படுத்தினால் இதை விட நன்மை தரக்கூடிய விஷயம் வேறு எதுவுமே இல்லை. இதற்கு கேஷ் பேக், ரிவார்ட் பாயிண்ட்கள் என பல நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் அதே கார்டை நாம் அனாவசியமாக செலவு செய்தோமானால் பெரிய கடன் வலையில் சிக்க நேரிடும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் வெறும் ரூ.100 கிரெடிட் கார்டு பாக்கி இருந்தாலும், மிகப்பெரிய வட்டி செலுத்த நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வங்கிகள் எப்போது வட்டி வசூலிக்கத் தொடங்கும்?: கிரெடிட் கார்டை வழங்கும்போது வங்கிகள் வட்டி இல்லா காலத்தை வழங்கும். அதாவது இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து கொண்டு, மொத்த பாக்கியையும் வட்டி இல்லா காலத்தின் கடைசி தேதிக்குள் ஒரு பைசா குறையாமல் செலுத்தி விட்டால் வட்டி கிடையாது.

எந்தெந்த சூழ்நிலைகளில் வட்டி வசூலிக்கப்படும்?:
தாமதக் கட்டணம்: உங்கள் கிரெடிட் கார்டு பில்லை உரிய தேதிக்குள் செலுத்த வேண்டும். ஒரு வேலை அந்த தேதியை தவறவிட்டால் உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனம் நிலுவையில் உள்ள தொகைக்கு வட்டி வசூலிக்கத் தொடங்கும்.
குறைந்தபட்ச கட்டணம்: ஒவ்வொரு மாதமும் நிலுவையில் உள்ள முழு தொகையையும் செலுத்த முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து குறைந்தபட்ச கட்டணத்தை மட்டும் செலுத்தினால், வங்கி மீதமுள்ள தொகைக்கு வட்டி வசூலிக்கும். இந்த ஆப்ஷனை நீங்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் பயன்படுத்தலாம். ஆனால் இதையே வழக்கமாக்க கூடாது.
பகுதியளவு கட்டணம்: ஒருவேளை நீங்கள் பகுதியளவு மட்டும் கட்டணத்தை செலுத்தி விட்டு மீதமுள்ள தொகையை செலுத்தாமல் இருந்தால், மீதமுள்ள தொகைக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்கள் வட்டி வசூலிக்கும்.
ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல்: கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்-மில் பணம் எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால் வட்டி இல்லா காலத்தை எல்லாம் பொருட்படுத்தாமல், வங்கிகள் அடுத்த நொடியில் இருந்து வட்டி விதிக்கத் தொடங்கும். வெறும் ரூ.100 பாக்கி இருந்தாலும் மளமளவென வட்டி அதிகரித்துவிடும். இதை ஒரு எளிய உதாரணத்தோடு பார்ப்போம்.
ஒருவருக்கு கிரெடிட் கார்டு பில் ரூ.10,100 வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் ரூ.10,000-த்தை மட்டும் கட்டிவிட்டு மீதி ரூ.100-ஐ அப்படியே வைத்திருக்கிறார் என்றால் அங்கு தான் பிரச்சனையே ஆரம்பமாகும்.
தற்போது கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர வட்டி 30 சதவீதமாக உள்ளது. அப்படியானால் மாதத்திற்கு 2.5 சதவீதம். எனவே ரூ.10,100-க்கு, மாதாந்திர வட்டி மட்டும் 252 ரூபாய். இந்த வேலையில் மறு மாதமும் அதே பயனர் ரூ.20,000 செலவு செய்திருக்கிறா.ர் இதற்கு கூடுதலாக 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கூட்டி கழித்து பார்த்தால் முதல் மாதம் வந்த வட்டி மற்றும் மறு மாதம் வந்த வட்டி ஆகியவற்றை சேர்த்து 752 ரூபாய் வரும்.
இதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால் 135 ரூபாய். இதனால் 20,100 ரூபாய் செய்த செலவுக்கு மொத்தமாக 20,988 ரூபாய் செலுத்த வேண்டி வரும், அதாவது உங்கள் அசல் பில் தொகையை விட 1,000 ரூபாய் அதிகமாகிறது. வெறும் ரூ.100 மீதமிருப்பதால் எவ்வளவு பெரிய தொகை வட்டிக்கு செல்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எனவே கிரெடிட் கார்டு பயனர்கள் பில் செலுத்தும் போது கவனமாக இருப்பது அவசியம்!


Click it and Unblock the Notifications