தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் பல முன்னணி நடிகர்களையும் நடிகைகளையும் திரை உலகில் அறிமுகம் செய்தவருமான இயக்குநர் இமயம் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்த பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. சினிமா மீது கொண்ட காதலால் சென்னை வந்தார். 1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கிவர். கிராமத்து பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கிய அவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கினார். பாரதிராஜாவின் படம் என்றாலே குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்ற நம்பிக்கையை கொண்டு வந்தவர்.
வேதம் புதிது போன்ற படங்கள் மூலம் சமூக அவலங்களை தைரியமாக திரையில் கொண்டு வந்தவர். எளிய மக்களின் வாழ்வியலை திரையுலகில் படம்பிடித்து காட்டி ரசிகர்கள் மனதில் இயக்குநர் இமயமாக உயர்ந்தவர்.
என் இனிய தமிழ் மக்களே என அவரது குரலில் ஒலிக்கும் இந்த வாசகத்திற்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழ் திரை உலகில் பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர். நடிகைகள் ராதிகா சரத்குமார், ராதா, மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரின் திரையுலகப் பயணத்தில் முக்கிய பங்காற்றியவர் பாரதிராஜா. முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன.

இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு இவரது மகன் மனோஜின் திடீர் மறைவு பாரதிராஜாவை இன்னும் பாதிக்க செய்தது.
6 முறை தேசிய விருது, 4 முறை பிலிம்பேர் விருது, பத்ம ஸ்ரீ விருது , 2 தமிழ் நாடு அரசு விருது என இவர் வாங்கிய விருதுகள் ஏராளம். இவரது சொத்து மதிப்பு ரூ.80 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலும் திரைபடங்கள் மூலம் கிடைத்த வருமானம் தான். பாரதிராஜாவை பொறுத்தவரை 42 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
அவருடைய முதல் திரைப்படம் 16 வயதினிலே. இறுதியாக 2023இல் பறவை கூட்டில் வாழும் மான்கள் - மாடர்ன் லவ் சென்னை என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான ஒரு சீரிஸ் இதுவாகும். 30 படங்களில் நடித்திருக்கிறார் இவர் நடித்த முதல் திரைப்படம் கல்லுக்குள் ஈரம் இவர் நடித்த கடைசி படம் மலையாள திரைப்படமான துடரும்.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சீரியல்களையும் இயக்கி இருக்கிறார் தெக்கத்தி பொண்ணு, அப்பனும் ஆத்தாளும் ஆகிய சீரியல்கள் இவருடைய இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா என்ற பெயரில் ஒரு சினிமா அகாடமியை நடத்தி வந்தார்.


Click it and Unblock the Notifications

