புகழ்பெற்ற லெனோவா நிறுவனம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சர்வர்களை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவை தலைமை இடமாகக் கொண்டது தான் லெனோவா நிறுவனம். இந்த நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் ,லேப் டாப் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் இந்த நிறுவனம் லெனோவா இந்தியா என்ற பெயரில் இயங்கி வருகிறது. புதுச்சேரியில் உள்ள தங்களுடைய ஆலையில் செயற்கை நுண்ணறிவு தேவைகளுக்கான சர்வர்களை தயாரித்து வருவதாக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள ஆலையில் 50,000 செயற்கை நுண்ணறிவு சர்வர்களும், 2400 ஜிபியூ யூனிட்களும் தயாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் இருக்கக்கூடிய ஆலை தான் லெனோவாவின் உற்பத்தி மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு இனி தயாரிக்கப்பட இருக்கும் செயற்கை நுண்ணறிவு சர்வர்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இது மட்டும் இன்றி இந்த நிறுவனம் தைபே, பெய்ஜிங், மோரிஸ்வில்லே ஆகிய இடங்களை அடுத்து பெங்களூருவில் தன்னுடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவியுள்ளது.
பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் லெனோவா நிறுவனத்தின் சர்வதேச அளவிலான நான்காவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகும்.
இதனிடையே புதுச்சேரி ஆலையில் தயாரிக்கப்பட இருக்கும் செயற்கை நுண்ணறிவு சர்வர்களில் 60% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என லெனோவா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு என்ற திட்டத்தின் கீழ் உற்பத்தி இணைக்கப்பட்ட நிதி உதவியை பெறுவதற்கான தகுதியை லெனோவா நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் லெனோவாவும் முக்கிய பங்களிப்பது மகிழ்ச்சி தருவதாக இதன் ஆசிய பசிபிக் பிரிவு தலைவர் ஆன அமர் பாபு தெரிவித்துள்ளார். லெனோவா நிறுவனத்தை பொறுத்தவரை இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டு திட்டங்களின் கீழும் இந்த நிறுவனம் விண்ணப்பம் செய்து நிதி உதவியினை பெற்றுள்ளது. லெனோவா நிறுவனம் சர்வதேச அளவில் கடந்த ஆண்டில் 57 பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 3 பில்லியன் டாலர்கள் வரை ஈட்டியுள்ளது. தற்போதைய சூழலில் கணினி அல்லாத தொழில்களின் மூலம் தான் இந்த நிறுவனத்திற்கு 47 சதவீத வருவாய் கிடைக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications