பெங்களூரு: ஸ்டார்ட்அப் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களூருவை நோக்கி முதலீடுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் பிரபல கண் கண்ணாடி பிராண்டான லென்ஸ்கார்ட் பெங்களூருவில் மிகப்பெரிய ஆலையை நிறுவப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய நிறுவனமான லென்ஸ்கார்ட் குறுகிய காலத்திலேயே முன்னணி கண் கண்ணாடி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. பவர் கிளாஸஸ், சன் கிளாஸஸ் என இந்த பிராண்டின் கண்ணாடிகளுக்கு சந்தையில் டிமாண்ட் அதிகம். இதனை அடுத்து நிறுவனத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பெங்களூருவில் புதிய ஆலை நிறுவப்பட உள்ளது.

லென்ஸ்கார்ட்டின் துணை நிறுவனர், பீயூஷ் பன்சால் இது தொடர்பான தன்னுடைய லிங்குடு இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெங்களூருவில் லென்ஸ்கார்ட் நிறுவனம் மிகப்பெரிய ஆலையை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
25 ஏக்கர் பரப்பளவில் மெகா ஆலையை அமைக்கப் போவதாகவும்,அதற்காக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு 60 கிலோ மீட்டர் தொலைவிற்குள் நிலம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இந்தப் பகுதிகளில் நிலம் வைத்திருப்பவர்கள் தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.
பன்சாலின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டில், லென்ஸ்கார்ட் நிறுவனம் இந்த பகுதியில் ஆலையை நிறுவுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களின் அரசு வழங்கும் என தெரிவித்துள்ளார்.
ஆலையை நிறுவுவதற்கு லென்ஸ்கார்ட் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் தேவனஹள்ளி உள்ளிட்ட பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.
குறிப்பாக பெரு நிறுவனங்கள் முதலீடு செய்யும் விருப்பமான இடமாக தேவனஹள்ளி இருக்கிறது. அண்மையில் கூட பிரபல பாக்ஸ்கான் நிறுவனம் 14,000 கோடி ரூபாய் மதிப்பில் தேவனஹள்ளியில் ஒரு ஆலையை நிறுவ இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த பகுதியில் இரண்டு ஆலைகளை பாக்ஸ்கான் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இந்த நிலையில் லென்ஸ்கார்ட் நிறுவனமும் இதே பகுதியில் ஒரு மிகப்பெரிய ஆலையை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது இந்த பகுதியில் முதலீடுகள் குவிவதை காட்டுகிறது. இந்த முதலீடுகள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என கர்நாடக கர்நாடக தொழில் துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications