கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் லென்ஸ்கார்ட் நிறுவனம் (Lenskart) தனது பங்கு வெளியீட்டுக்கான (IPO) அதிகாரப்பூர்வ ஆவணத்தை செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவிடம் (SEBI) நேற்று (ஜூலை 29) சமர்ப்பித்தது. அதில், லென்ஸ்கார்ட் இணை நிறுவனர் மற்றும் ப்ரமோட்டர் சுமீத் கபாஹி, டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற பி.காம் பட்டமும், மதிப்பெண் சான்றிதழும் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் IPO வெளியீட்டுக்கு இது சரியான சமயம் அல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, லென்ஸ்கார்ட் இணை நிறுவனர் சுமீத் கபாஹி, தனது பட்டம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் நகல்களைப் பெறுவதற்காக பலமுறை பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் உள்ள போர்டலில் கூட நகல் விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுவரை பல்கலைக்கழகத்திடம் இருந்து எந்த பதிலும் பெற முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், லென்ஸ்கார்ட் நிறுவனம், எதிர்காலத்தில் அவரது கல்வி தொடர்பான தேவையான ஆவணங்களை மீட்டெடுக்க முடியுமா என்பதை உறுதி செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதை பார்த்த சமூக வலைதள பயனர் ஒருவர், "இது யாருடைய கவனக்குறைவு..? பல்கலைக்கழகமா..? அல்லது சுமீத் கபாஹி உடையதா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஒருவர், "இது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சனை அல்ல. இது சாதாரணமாக நடக்கும் விஷயம் தான். என் மும்பை பல்கலைக்கழகத்திலும் இதேபோல் தான் நடந்தது" என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், "நீங்கள் முதலீட்டாளராக இருக்கிறீர்கள் என்று நினைத்தால், IPO ஆவணத்தில் 'பல்கலைக்கழகத்தை கேட்டோம், பதில் இல்லை.. நம்புங்கள்' என்று படிப்பது எப்படி இருக்கும்?" என்று விமர்சித்துள்ளார். மற்றொருவர் நகைச்சுவையாக, "லென்ஸ்கார்ட்-க்கு அந்த ஆவணங்களை கண்டுபிடிக்க ஸ்பெஷல் லென்ஸ் தேவை" என்று விமர்சித்துள்ளார்.
சுமீத் கபாஹி, Peyush Bansal, Amit Choudhary, Neha Bansal, Ramneek Khurana ஆகியோருடன் இணைந்து லென்ஸ்கார்ட் நிறுவனத்தை தொடங்கினார். 2024-25ஆம் நிதியாண்டில் அவருக்கு ரூ.2.246 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. 2024-25ஆம் நிதியாண்டில் லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் வருவாய் ரூ.6,652.5 கோடிக்கு உயர்ந்தது. முந்தைய ஆண்டில் இது ரூ.5,642.37 கோடி ஆக இருந்தது. அத்துடன், நிறுவனம் முதல் முறையாக ரூ.297.34 கோடி லாபம் காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications