பிரபல கண் கண்ணாடி விற்பனை நிறுவனமான லென்ஸ்கார்ட் தெலுங்கானாவில் 1500 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா அரசுடன் லென்ஸ் கார்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது.
இதன்படி தெலுங்கானா மாநிலத்தின் ஃபேப் சிட்டியில் லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைக்கப்பட இருக்கிறது. 1500 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஆலை நிறுவப்படும் என்று லென்ஸ்கார்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா தொழில்துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபு தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். லென்ஸ்கார்ட் மற்றும் தெலுங்கானா அரசு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருப்பதை உறுதி செய்துள்ளார். உலகின் மிகப்பெரிய கண் கண்ணாடி உற்பத்தி ஆலையை லென்ஸ் கார்ட் நிறுவனம் 1500 கோடி ரூபாய் முதலீட்டில் தெலுங்கானாவில் நிறுவ இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த ஆலையில் கண் கண்ணாடிகள் ,கண்ணாடிகளுக்கு தேவையான லென்ஸ்கள், சன் கிளாசஸ் மற்றும் பிற உபகரணங்கள் தயார் செய்யப்படும் என்றும் இவை இந்திய சந்தை மட்டும் இல்லாது தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
கண் கண்ணாடி உற்பத்தி ஆலையை தவிர ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தையும் நிறுவனம் அமைக்க இருக்கிறது என குறிப்பிட்டுள்ள அவர் இதன் மூலம் 2100 வேலை வாய்ப்புகள் உருவாகும் என சுட்டிக்காட்டி உள்ளார்.
ஃபேப் சிட்டியில் இந்த உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான நிலம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் கூடிய விரைவில் அரசு இந்த நிலத்தை லென்ஸ்கார்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் என அவர் கூறியுள்ளார்.
2024 ஏப்ரல் மாதத்தில் லென்ஸ் கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பியூஸ் பன்சால் கர்நாடகாவில் தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவ இருப்பதாக கூறியிருந்தார். அதாவது கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு 60 கிலோ மீட்டர் தொலைவிலேயே 25 ஏக்கர் நிலத்தை தேடி வருவதாகவும் நிலம் கிடைக்கும் பட்சத்தில் அங்கே லென்ஸ்கார்ட் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் இடம் கிடைக்காததை அடுத்து லென்ஸ்கார்ட் நிறுவனம் தன்னுடைய உற்பத்தி ஆலையை தெலுங்கானாவிற்கு கொண்டு சென்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது தான் லென்ஸ்கார்ட் நிறுவனம்.
தற்போது இந்தியா முழுவதும் 1500 விற்பனை நிலையங்களை வைத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலம் பீவாடியில் கண் கண்ணாடி உற்பத்தி ஆலையை செயல்படுத்தி வருகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications