தென்கொரியாவை சேர்ந்த மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் கூடிய விரைவில் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியீடு செய்வதற்கு தயாராகி வருகிறது. இது தொடர்பாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி இடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
இதன்படி எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 15000 கோடி என்ற மதிப்பீட்டில் ஐபிஓ வெளியீடு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறதாம். இதில் 10 .18 கோடி ஈக்விட்டி பங்குகள் ஆஃபர் ஃபார் சேல் முறையில் பங்குதாரர்களிடம் இருந்து விற்பனைக்கு வர இருக்கிறது. ஒரு பங்கின் ஃபேஸ் வேல்யூ 10 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஐபிஎல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் பணமானது நிறுவனத்திற்கு செல்லாது மாறாக பங்குதாரர்களுக்கு செல்ல இருக்கிறது.

இந்த ஐபிஓ வரும்போது இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் முக்கியமான அதே அளவில் அதிக மதிப்பீடு கொண்ட ஐபிஓவாக இருக்கும். இந்த ஐபிஓ வெளியீட்டுக்கு மார்கன் ஸ்டான்லி, ஜேபிமார்கன், ஆக்சிஸ் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்கள் முன்னணி மேலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளன .
2028 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்னணு சாதனங்களுக்கான சந்தை 10 லட்சம் கோடி என்ற மதிப்பீட்டை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் சந்தை 7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது 12 சதவீதமான வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி படையெடுப்பது மற்றும் குறிப்பிட்ட சில மின்னணு சாதனங்கள் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறி இருப்பது ஆகியவை காரணமாக இந்தியாவில் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வாஷிங் மெஷின், ரெஃப்ரிஜிரேட்டர், டிவி, ஏசி மற்றும் மைக்ரோவேவ் ஓவன் ஆகிய பிரிவுகளில் முன்னணி நிறுவனமாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இருக்கிறது.
இந்திய சந்தையில் 80 சதவீதம் தங்கள் நிறுவனமே வைத்திருப்பதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது. உலகிலேயே வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு பொருளாதாரமாகவும் சந்தையாகவும் இந்தியா இருப்பதால் தங்கள் நிறுவனம் இங்கே மேலும் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை இருப்பதாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வில்லியம் சோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் தேசிய பிராண்டாக எல்ஜி மாற வேண்டும் என்பதுதான் தங்களுடைய நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருமானம் 6,408 கோடி ரூபாய் ஆகும். இதில் நான்கில் மூன்று பங்கு வருமானம் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் இந்த நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது. 2024 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனம் மொத்தம் 21,352 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications