ஆப்கானிஸ்தான், இலங்கை தொடர்ந்து பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தன் நாட்டை வீட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார். பங்களாதேஷில் ஜூலை மாதம் வெடித்த மாணவர் போராட்டம் பெரும் வன்முறையாக மாறி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவுக்குக் கடைசி நேரத்தில் தப்பித்துள்ளார். இந்த நிலையில் அந்நாட்டில் இயங்கி வரும் எல்ஐசி நிறுவனம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா, பங்களாதேஷில் உள்ள தனது அலுவலகம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை மூடப்படும் என திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களில் நடந்த கடுமையான தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று பிரதமர் ஷேக் ஹசீனா பங்களாதேஷ் நாட்டை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லமான Ganabhaban-க்குள் நுழைந்து மொத்த வீட்டையும் சூறையாடினர். இதைத் தொடர்ந்து பல கடைகள் அடித்து உடைத்து பொருட்கள் திருடப்படும் உள்ளது.
இந்த நிலையில் பங்களாதேஷ் ராணுவத் தலைவர் வேக்கர்-உஸ்-ஜமான் திங்கள்கிழமை போராட்டக்காரர்களிடம் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின்னர் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பேன் என்றும் நாட்டு மக்களுக்கு அரசு தொலைக்காட்சியின் வாயிலாக உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து தான் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா பங்களாதேஷ் குறித்த அறிக்கையை வெளியிட்டது, இதில் "வங்காளதேசத்தில் நிலவும் சமூக-அரசியல் சூழ்நிலை காரணமாக, ஆகஸ்ட் 05, 2024 முதல் ஆகஸ்ட் 07, 2024 வரையிலான காலகட்டத்தில் வங்கதேசத்தின் LIC இன் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்" என்று LIC தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் அரசு ஆகஸ்ட் 05, 2024 முதல் ஆகஸ்ட் 07, 2024 வரை 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனா பங்களாதேஷ் நாட்டில் ஜனவரி மாதம் நடந்த பொதுத் தேர்தலில் 41.8% வாக்குகளைப் பெற்று மீண்டு அதிகாரத்திற்கு வந்த நிலையில் பல வருடங்களாகச் சர்ச்சையிலிருந்த வேலைவாய்ப்பு இடஓதுக்கீடு மீண்டும் அமலாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கினார். இதனால் பங்களாதேஷ் முழுவதும் மாணவர்கள் எழுச்சியால் அரசியல் வன்முறை வெடித்தது.
எல்ஐசியின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 6.10 சதவீதம் குறைந்து ரூ.1,110-ல் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications