கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட 5000 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரத்தை எல்ஐசி நிறுவனமே மொத்தமாக வாங்கி இருக்கிறது. அதானி போர்ட்ஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக 5000 கோடி ரூபாய் மதிப்பில் பத்திர வெளியீட்டை செய்திருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு என அதானி நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த பத்திரங்களுக்கு 7.75% வட்டி ஆண்டு வட்டி வழங்கப்பட இருக்கிறது.
இந்த NCD வெளியீடு, APSEZ-இன் வலுவான நிதி நிலை மற்றும் 'AAA/Stable' மதிப்பீட்டு உடன் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பத்திரங்கள் BSE-யில் பட்டியலிடப்பட்டு, கடன் பத்திர முதிர்வு காலத்தை 4.8 ஆண்டுகளிலிருந்து 6.2 ஆண்டுகளாக நீட்டிக்கிறது.

இந்த பத்திரங்களை முழுமையாக எல்ஐசி நிறுவனமே கையகப்படுத்தி இருக்கிறது. அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமான APSEZ நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 ஆண்டுகாலம் கொண்ட 5000 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை நாங்கள் வெளியிட்டோம். எங்கள் நிறுவனம் இவ்வளவு அதிகபட்ச தொகைக்கு பத்திரம் வெளியிடுவது இதுவே முதல்முறை. அதேபோல 15 ஆண்டுகளுக்கான ஒரு பத்திரத்தை வெளியிடுவதும் இதுவே முதல் முறை என தெரிவித்திருக்கிறது .
APSEZ-இன் முழு நேர இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அஷ்வனி குப்தா கூறுகையில், "இது வெறும் நிதி திரட்டல் மட்டுமல்ல, மிகவும் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட மூலதன மேலாண்மை திட்டத்தின் செயல்படுத்தல் ஆகும். இது குறைந்த கடன் விகிதத்தை பராமரித்தல், கடன் முதிர்வு காலத்தை நீட்டித்தல், செலவைக் குறைத்தல் மற்றும் நிதி மூலங்களை பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது." இந்த திட்டம், APSEZ-ஐ உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த போக்குவரத்து நிறுவனமாக உயர்த்துவதற்கு உதவும்.
பொதுவாக நிறுவனங்கள் பத்திரங்கள் மூலம் இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. ஆனால் இந்த பத்திரத்தை முழுவதுமாக எல்ஐசி நிறுவனம் வாங்கி இருப்பதன் மூலம் அதானி குழுமத்திற்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது என்றே சொல்லப்படுகிறது. அதானி போர்ட்ஸ் நிறுவனம் இந்த தொகையை தங்கள் நிறுவனத்தின் கடன்களை திரும்ப செலுத்துவதற்கும், நிறுவன கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தும் என சொல்லப்படுகிறது.
APSEZ, 2030 நிதியாண்டில் (FY30) 1 பில்லியன் டன் சரக்கு கையாளும் இலக்கை வைத்துள்ளது, இது FY25-ஐ விட இரு மடங்கு அதிகமாகும். துறைமுக நடவடிக்கைகளுக்கு அப்பால், நிறுவனம் தளவாடங்கள் (logistics) மற்றும் கடல்சார் (marine) தொழில்களை விரிவாக்குவதற்கு முனைப்பு காட்டுகிறது. இந்த நீண்டகால திட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான திட்டங்களுக்கு, மேம்பட்ட கடன் முதிர்வு காலம் மற்றும் குறைந்த மூலதன செலவு முக்கியமானவை.
5000 கோடி ரூபாய் என்பது அதிகபட்ச தொகை, அதேபோல 15 ஆண்டுகள் என்பது நீண்ட காலம் என்பதால் வங்கிகள் தரப்பில் அதானி குழும பத்திரங்களை வாங்குவதற்கு முன்வர மாட்டார்கள் என்பதால் அதானி குழுமம் எல்ஐசி நிறுவனத்திடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
எல்ஐசி நிறுவனத்தை பொருத்தவரை இதுவரை கார்ப்பரேட் நிறுவன பத்திரங்களில் 80,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. அதானி போர்ட்ஸ் நிறுவனம் தற்போது சுமார் 36,422 கோடி கடன் கொண்ட ஒரு நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவில் 15 துறைமுகங்களை தனக்கு சொந்தமானதாக வைத்து அதானி போர்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அதானி போர்ட்ஸ் நிறுவனம் இந்திய துறைமுகங்களில் 27 சதவீதத்தை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக மேம்பாட்டாளராகவும், செயல்பாட்டு நிறுவனமாகவும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியா மட்டும் இல்லாமல் இலங்கை, இஸ்ரேல், தான்சானியா ஆகிய நாடுகளிலும் துறைமுகங்களை செயல்படுத்தி வருகிறது. அதானிநிறுவனம் தன்னுடைய துறைமுக சரக்கு கையாளும் திறனை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் டன்களாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications