இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில், மத்திய அரசு தனது வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியைத் திரட்டும் பொருட்டு எல்ஐசி நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டு அதன் மூலம் முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் அரையாண்டு லாபம் உச்சத்தைத் தொட்டு உள்ளது.
எல்ஐசி நிறுவனம்
2021-22ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதம் அதாவது அரையாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் லாப அளவீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 1,437 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 6 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லாப உயர்வு
ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பு இத்தகைய லாப உயர்வு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும், ஆர்வத்தையும் கொடுத்துள்ளது. 2021-22 நிதியாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் லாபம் 1,437 கோடி ரூபாய் அளவிற்கு உயர மிக முக்கியமான காரணம் இக்காலகட்டத்தில் எல்ஐசி நிறுவனம் செய்த முதலீட்டில் கிடைத்த போனஸ், வட்டி, ஈவுத்தொகை, வாடகை மற்றும் பங்கு விற்பனை மூலம் கிடைத்த வருமானம் ஆகியவை தான்.
ரூ.1.49 லட்சம் கோடி வருவாய்
இக்காலகட்டத்தில் எல்ஐசி நிறுவனத்தின் மொத்த லாபம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 2021 வரையில் முடிந்த அரையாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் வருவாய் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டில் 1.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்சூரன்ஸ் ப்ரீமியம்
மேலும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் பிரிவில் கிடைக்கும் வருமானத்தின் அளவு 1.84 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.86 கோடி ரூபாயாக மட்டுமே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தை மார்ச் 2022க்குள் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.
எல்ஐசி ஐபிஓ
இந்த ஐபிஓ மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலான முதலீட்டைத் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது, அதாவது இதுவரை மிகப்பெரிய முதலீட்டைத் திரட்டி பேடிஎம் நிறுவனத்தின் 18,300 கோடி ரூபாய் முதலீட்டை விடவும் 5 மடங்கு அதிகமாகும்.


Click it and Unblock the Notifications