சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation of India (LIC) தனக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் வணிகக் கட்டிடங்களை விற்பனை செய்து சுமார் 6-7 பில்லியன் டாலர் அதாவது, ரூ.50,000 முதல் ரூ.60,000 கோடி வரையிலான நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக லைவ்மிண்ட் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், எல்ஐசி தனது சொத்துக்களை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.

சமீபத்தில் எல்ஐசி நிறுவனம் ஹெல்த் இன்சூரன்ஸ் துறைக்குள் நுழையவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்காக எல்ஐசி ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது, தற்போதைய நிதி திரட்டல் இதற்காகவும் இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
LIC நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தங்களது ரியல் எஸ்டேட் சொத்துக்களை ஆய்வு செய்து விற்பனை செய்வதற்கான திட்டத்தை உருவாக்க புதிய குழுவை அமைத்துள்ளது. இத்திட்டம் மும்பையில் இருந்து தொடங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
காப்பீட்டுத் துறையில் தற்போது தனியார் துறையின் ஆதிக்கம் அதிகரித்து எல்ஐசி அதிகப்படியான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. 2024 நிதிய ஆண்டின் முதல் ப்ரீமிய வருமானத்தில் 58.8 சதவீத சந்தை பங்கைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சந்தையில் தனது வர்த்தக பங்கீட்டைப் பாதுகாக்க LIC நிறுவனம் போராடி வரும் வேளையில் ரியல் எஸ்டேட் சொத்து விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஜீவன் பாரதி கட்டிடம், கொல்கத்தா சித்தரஞ்சன் அவென்யூவில் உள்ள LIC கட்டிடம், மும்பையில் ஆசியாடிக் சொசைட்டி மற்றும் அக்பராலிஸ் ஆகியவற்றின் கட்டிடங்கள் LIC நிறுவனத்தின் சில முக்கியமான சொத்துகள் ஆகும்.
எல்ஐசி நிறுவனம் தனது வர்த்தகத்தை தற்போது பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ள வேளையில் 2 மற்றும் 3 நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் களமிறங்க முடிவு செய்துள்ளது. இதேபோல் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் பிரிவிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய எல்ஐசி முடிவு செய்துள்ளது.
2023-24 நிதிய ஆண்டின் கடைசி காலாண்டில், கடந்த நிதிய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.13,421 கோடியாக இருந்த லாபத்தை விட 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.13,762 கோடி நிகர லாபத்தை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications