இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்ட நிலையில் அந்த ஐபிஓ தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் அதனை வாங்கிய முதலீட்டாளர்களுக்கு தற்போது மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை வர்த்தகம் மிகப்பெரிய சரிவை கண்டு வரும் நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
தற்போது வந்த தகவலின்படி எல்ஐசி ஐபிஓ-வில் முதலீடு செய்தவர்களுக்கு இரண்டு லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எல்ஐசி ஐபிஓ
2022 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையின் மிகவும் பேசப்பட்ட ஐபிஓ, நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஐபிஓ என்பது தெரிந்ததே. இந்த ஐபிஓ பட்டியல் இடப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. எல்.ஐ.சி ஐபிஓ ஒரு பங்குக்கு ரூ.949 என்ற விலையில் பட்டியல் இடப்பட்ட நிலையில் தற்போது 34% சரிந்துள்ளது.
34% சரிவு
எல்ஐசி பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளில் இருந்து அதன் ஐபிஓ விலைக்கு மேல் வர்த்தகம் செய்யவில்லை. எல்ஐசி ஒரு பங்குக்கு ரூ.949 என்ற விகிதத்தில் ஐபிஓ கொண்டு வந்தது. இப்போது எல்ஐசியின் பங்குகள் அதன் வெளியீட்டு விலையை விட 34 சதவீதம் குறைவாக 628 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. எல்ஐசியின் ஐபிஓவில் முதலீடு செய்தவர்கள் ஒரு பங்கிற்கு ரூ.321 இழப்பை சந்திக்கின்றனர்.
2 லட்சம் கோடி நஷ்டம்
எல்ஐசியின் சந்தை மூலதனமும் ரூ.3.98 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. எல்ஐசி ஐபிஓ அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் சந்தை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் தற்போது எல்ஐசியின் சந்தை மூலதனத்தில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அரசு தலையிடுமா?
எல்ஐசி ஐபிஓ பங்குகளை விற்பதன் மூலம் அரசாங்கம் ரூ 20,557 கோடி திரட்டியது. தற்போது அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் அரசு தான் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று முதலீட்டாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் தற்போது சிதைந்து வரும் நிலையில் அரசு இதனை தடுத்து நிறுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications