மும்பை: ஆயுள் காப்பீடு என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது எல்ஐசி நிறுவனம்தான். பல ஆண்டு காலமாக இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு துறையில் எல்ஐசி நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நவீன காலத்துக்கு ஏற்ப புது புது திட்டங்களை அறிவித்து மக்களை தக்க வைத்து வருகிறது. எனவே தான் எத்தனை தனியார் நிறுவனங்கள் வந்தாலும் சந்தையில் எல்ஐசி-ஐ மிஞ்ச முடியவில்லை.
இந்த நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு எல்லாம் ஷாக் கொடுக்கும் வகையில் எல்ஐசி நிறுவனம் மருத்துவ காப்பீடு துறையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான செய்தியை தி ஃபைனான்சியல் எகஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை அமைப்புகளிடம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் மருத்துவ காப்பீட்டு சந்தையில் எல்ஐசி நிறுவனம் கால் பதிக்க திட்டமிட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எல்ஐசி இதற்காக சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என பங்குச்சந்தை ஆவணத்தில் தெரிவித்துள்ளது. இந்த பேச்சு வார்த்தை என்பது இன்னும் ஒப்பந்தம் அளவிற்கு செல்லவில்லை என்றும் ஆரம்ப நிலையில் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒப்பந்தத்தின் செயலாக்கம் மற்றும் இறுதி முடிவு ஆகியவை எல்ஐசி நிறுவனத்தின் வாரிய குழு இயக்குனர்களின் ஒப்புதல் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல் உள்ளிட்டவற்றுக்கு உட்பட்டது என கூறியுள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு தான் எந்த ஒரு பிணைப்பு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி நிறுவனம் இது தொடர்பாக தேவைப்படும்போது பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க முறைப்படி தகவல்களை வெளியிடும் என அறிவித்துள்ளது. முன்னதாக எல்ஐசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என சித்தார்த்தா மோகண்டி பேட்டி ஒன்றில் எல்ஐசி நிறுவனம் மருத்துவ காப்பீட்டு சந்தையில் கால்பதிக்க திட்டமிட்டிருப்பதை குறிப்பிட்டிருந்தார்.
தற்போது குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் பங்குகளை எல்ஐசி வாங்குகிறது , ஆனால் முழுமையாக நிறுவனத்தை கைப்பற்றும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளார். எல்ஐசி நிறுவனம் இப்போது ஆயுள் காப்பீடு, ஓய்வுகால திட்டங்கள், குழந்தைகளுக்கான யூனிட் இணைக்கப்பட்ட முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது.
மருத்துவ காப்பீட்டு துறையில் நுழைவதன் மூலம் அனைத்து வகையில் காப்பீடுகளையும் கொண்ட நிறுவனமாக மாறும். ஒரு வேளை எல்ஐசி நிறுவனம் தனியாக மருத்துவ காப்பீடு திட்டங்களை அறிவித்தால் அது தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக அமையும். ஏனெனில் இந்தியாவில் காப்பீடு துறையில் நம்பகமான நிறுவனம் என்ற பெயரை எல்ஐசி கொண்டுள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் இந்த தகவல் வெளியானதை அடுத்து மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்கின் மதிப்பு ஒரே நாளில் 2 சதவீதம் உயர்ந்து மார்ச் 19ஆம் தேதி 775 ரூபாய் என வர்த்தகமானது.


Click it and Unblock the Notifications