எல்ஐசி நிறுவனம் 2025 ஆம் நிதி ஆண்டில் சுமார் 1.30 லட்சம் கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான சித்தார்த்தா மோகன்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் எல்ஐசி நிறுவனம் 38,000 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 23,300 கோடி ரூபாயாக தான் இருந்தது. நடப்பாண்டில் முதலீட்டினை அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் எல்ஐசி நிறுவனம் 15,500 கோடியை லாபமாக பெற்றுள்ளது. அதாவது கடந்த காலாண்டினை விட இது 13.5% அதிகமாகும்.

இது தொடர்பாக தகவல் அளித்துள்ள எல்ஐசி நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான சித்தார்த்தா, கடந்த நிதியாண்டில் எல்ஐசி 1.32 லட்சம் கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்ததாகவும், நடப்பாண்டிலும் 1.30 லட்சம் முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
சரியான சந்தை போக்கினை கவனித்து அதற்கு ஏற்ற வகையில் முதலீடுகளை மேற்கொள்வோம் என கூறினார். ஜூன் மாதம் இறுதி நிலவரப்படி எல்ஐசி நிறுவனம் பல்வேறு நிறுவனங்களில் செய்திருக்கும் முதலீடுகளின் மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாய் ஆகும். எல்ஐசி நிறுவனம் 282 நிறுவனங்களில் தனது முதலீட்டினை மேற்கொண்டு இருக்கிறது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் செய்திருந்த முதலீடு 42 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024 மார்ச் மாதத்தில் அது 49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டை பொருத்தவரை எல்ஐசி நிறுவனம் 10,461 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருப்பதாக தெரிவித்தது. எல்ஐசி நிறுவனத்தின் மொத்த வருமானமும் ஜூன் உடன் முடிவடைந்த காலாண்டில் 2,10,910 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.88 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.
எல்ஐசி நிறுவனத்திற்கு பிரீமியம் மூலம் கிடைத்த வருமானம் மட்டும் ஜூன் உடன் முடிவடைந்த காலாண்டில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதே காலாண்டில் 98,363 கோடி பிரீமியம் மூலம் எல்ஐசி வருமானமாக ஈட்டியது. அதுவே நடப்பு ஆண்டில் 1.13 லட்சம் கோடியென அதிகரித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications