அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி 22 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படுகிறது. இதற்காக உத்தரப்பிரதேச மாநில அரசு தடல்புடலான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் கோயில் அருகே மொத்தமுள்ள 84 கோசி பரிக்ரமா பகுதிகளையும் உத்தரப் பிரதேச மாநில அரசு மதுவிலக்கு மண்டலமாக அறிவித்துள்ளது.

4 கோசி பரிக்ரமா பகுதிகளையும் உத்தரப் பிரதேச மாநில அரசு மதுவிலக்கு மண்டலமாக அறிவித்துள்ளது மூலம் அங்கு மது விற்பனை மற்றும் மது அருந்துதலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஏற்கெனவே உள்ள மதுபானக் கடைகள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்படும் அல்லது மூடப்படும் என்று மாநில ஆயத் துறை அமைச்சர் நிதின் அகர்வால் கூறியுள்ளார்.
ஸ்ரீ ராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர டிரஸ்ட் பொதுச் செயலாளர் சம்பத் ராயை சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பை அகர்வால் வெளியிட்டுள்ளார்.
அது பற்றி அமைச்சர் அகர்வால் கூறுகையில், ராமர் கோயில் பொது செயலாளரை சந்தித்தபோது கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் மதுவிலக்கு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தேன்.
84 கோசி பரிக்ரமா மார்கில் மதுபானப் புழக்கம் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமர் கோயிலைப் புனிதப்படுத்த உள்ளோம். ஏற்கெனவே இருக்கும் மதுபானக் கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுபானம் அருந்தியவர்கள் கோயில் வளாகம் அருகே அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்காக ஆங்காங்கே போலீஸார் நின்று சந்தேகப்படக்கூடிய நபர்களை கருவிகள் மூலம் பரிசோதனை நடத்துவார்கள். மதுபானம் அருந்தி அந்தப் பக்கமாக வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிதின் அகர்வால் கூறினார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு வரும் நிலையில் பெரிய அளவில் முன்னேற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள புதிய ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்தர மோடியும் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.
புதிய ராமர் கோயில் அமைந்துள்ள இந்துக்களின் புனித நகரமான அயோத்தியில் பல்வேறு பாரம்பரிய அம்சங்களை உத்தரப் பிரதேச மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சரயு நதியில் நீர்வழி மெட்ரோ திட்டத்தை இயக்க உள்ளது. இதன் மூலம் சாலையில் நிகழும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்குச் செல்லும் பயண நேரத்தையும் எரிபொருள் சிக்கனத்தையும் இந்த சரயு நதி நீர்வழி மெட்ரோ திட்டம் பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரயு நதி நீர்வழி மெட்ரோ திட்டத்துக்காக புதிய நவீன கப்பல்கள் இயக்கப்படும். ஒரேநேரத்தில் நூற்றுக்கும் மேலானவர்கள் இதில் பயணம் செய்யலாம். அயோத்தியில் உள்ள 5 பகுதிகள் இடையே இந்த சரயு நதி நீர்வழி மெட்ரோ திட்டம் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications