மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படக்கூடிய பேட்டரிகளை தயாரிப்பதற்கு லித்தியம் மிக முக்கியமான ஒரு தனிமமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியா மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் தற்போது மின்சார வாகனங்கள் உற்பத்தியும் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. இதனால் லித்தியத்திற்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லித்தியம் புதையல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஹெச்பிசிஎல்-இன் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது மின்சார வாகன புரட்சியில் இந்தியா உலகிலேயே முன்னணி நாடாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருப்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள லித்தியம் இருப்பு தான்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் 6 மில்லியன் டன்கள் அளவுக்கான லித்தியம் புதைந்திருப்பது புவியியல் ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்த லித்தியத்தை பிரித்து எடுத்து நாம் எடுத்து பயன்படுத்த தொடங்கும்போது மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியில் நம்பர் ஒன் இடத்தையும் லித்தியம் ஏற்றுமதி மூலம் பெரும் லாபமும் காண முடியும்.
உலக அளவில் ஆஸ்திரேலியா, சீனா , சிலி, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் தான் அதிக அளவில் லித்தியம் இருப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெருமளவிலான லித்தியத்தை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. 2023 - 24 ஆம் நிதியாண்டில் இந்தியா 2.9 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டு லித்தியம் இயான் பேட்டரிகளை இறக்குமதி செய்திருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை ஹாங்காங் மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியும் மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து இருப்பதால் இந்தியாவிற்குள்ளேயே லித்தியம் பிரித்து எடுத்து பேட்டரிகளை உற்பத்தி செய்யும் போது அது மிகப்பெரிய அளவில் நமக்கு லாபமானதாக அமையும். உலக அளவில் 26 மில்லியன் டன்கள் லித்தியம் கையிருப்பு இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
எனவே ஜம்மு காஷ்மீரில் இருக்கும் லித்தியம் இருப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உலக அளவில் மின்சார வாகன சந்தையில் இந்தியா மிகப்பெரிய தலைவராக உருவாவதற்கான வாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே ஜி3 அளவிலான லித்தியம் ஆய்வுக்கு ஒப்பந்த புள்ளிகளை கோரியது. ஆனால் இரண்டு முறையும் ஒப்பந்தங்களை பெற நிறுவனங்கள் முன்வரவில்லை. போதுமான ஆய்வு தரவுகள் இல்லாததால் தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
இந்த நிலையில் தான் அரசு அடுத்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் ஜி2 அளவிலான ஆய்வுக்கு ஒப்பந்த புள்ளி கோர இருப்பதாக சொல்லப்படுகிறது. லித்தியத்தை பிரித்து எடுத்து அதனை நாம் பயன்படுத்த ஏதுவாக மாற்ற நுணுக்கமான தொழில்நுட்பங்கள் தேவை. மத்திய அரசை பொறுத்தவரை லித்தியம் கையிருப்பை முறையாக கையாள வேண்டிய சவால் இருக்கிறது. பொருத்தமான நிறுவனத்தை தேர்வு செய்து ஒப்பந்தத்தை வழங்குவது அரசுக்கு சவாலாக இருக்கும். இந்த சவாலை அரசு கடந்துவிட்டால் நிச்சயம் மின்சார வாகன சந்தையில் பெரிய அளவில் சாதிக்கும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications