அவசர காலத்திற்கு வங்கியில் வழங்கப்படும் லோன்களையே சிலர் பெரிதும் நம்பி இருக்கின்றனர். அப்படி இருக்கையில் தங்களுடைய டாக்குமெண்ட்டை மட்டும் கொடுத்தால் போதாது. கூடவே கடன் பெறுபவருக்கு ஒரு கேரண்டி கையெழுத்தும் இருந்தால் தான் வங்கிகள் கடன் தர முன்வரும். உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏதோ ஒரு நேரத்தில் உங்களிடம் கேரண்டி கையெழுத்தை கேட்டிருப்பார்கள். நீங்களும் அவர்கள் மேல் உள்ள பாசம், நட்பு மற்றும் நோ சொல்ல முடியாத தர்ம சங்கடமான காரணங்களால் பேனாவை எடுத்து கையெழுத்தும் போட்டிருப்பீர்கள்.
நாம் லோன் வாங்கவில்லை, வெறும் கையெழுத்து தானே போடுகிறோம் என்று மட்டும் நினைக்காதீர்கள். ஏனெனில் சட்டப்படி நீங்கள் போடும் கேரண்டி கையெழுத்து உங்களை நிதி நெருக்கடியில் தள்ளிவிடும்.
கேரண்டி கையெழுத்து அல்லது ஜாமின் கையெழுத்து என்றால் என்ன?: ஒருவருக்கு கடன் வழங்க பேங்க் முன் வரும் போது அவர் திருப்பிச் செலுத்துவாரா? என்ற சந்தேகம் இருந்தால் உடனே ஒரு ஜாமின்தாரரை கூட்டி வரச் சொல்லும். சில அரசாங்க ஊழியர்களுக்கு இது போன்ற பிரச்சினை ஏற்படுவதில்லை. ஆனால் தனியார் வேலைகளில் பணிபுரிபவர்கள், தங்களுடைய தொழிலை நம்பி கடன் பெறுபவர்கள் போன்றவர்களிடம் கண்டிப்பாக வங்கிகள் ஒரு ஜாமின்தாரரை கேட்கும்.

ஏன் இது போன்ற நடைமுறை இருக்கிறது தெரியுமா? ஒருவேளை உங்களால் கடனை சரிவர செலுத்த முடியவில்லை என்றால், அதற்கான முழு பொறுப்பை கேரண்டி கையெழுத்து போடுபவர் ஏற்க வேண்டும். எனவே நீங்கள் ஜாமின் கையெழுத்து போடுகிறீர்கள் என்றால் அவர் வாங்கும் கடனுக்கு நீங்களும் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சட்டம் சொல்வது என்ன?: ஒருவர் கடனை வாங்கிவிட்டு அதை சரிவர திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கடன் வாங்கியவருக்கு எதிராக அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் வங்கிகள் எடுக்கும். பின்னர் கேரண்டி கையெழுத்து போட்டவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உரிமையுண்டு.
சில நேரங்களில் கடன் வாங்கியவர் மற்றும் ஜாமீன்தாரர் ஆகிய இருவரிடமும் ஒரே நேரத்தில் வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம். இந்திய ஒப்பந்தச் சட்டம் பிரிவு 128-ன் படி கடன் பெற்றவர் மற்றும் அவருக்கு ஜாமின் கையெழுத்து போட்டவர் இருவருக்கும் சமமான பொறுப்பு உள்ளது. அதாவது ஜாமின்தாரர் அசல் தொகைக்கு மட்டுமல்ல வட்டி அபராதம் மற்றும் பிற கட்டணங்கள் அனைத்திற்கும் கடன் பெற்றவரை போலவே பொறுப்பாவார்.
கடன் பெற்றவர் சரியாக லோன் செலுத்தவில்லை என்றால் கேரண்டி கையெழுத்து போட்டவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன?:
சிபில் ஸ்கோர் குறையும்: கடன் பெற்றவருக்கு மட்டுமன்றி கேரண்டி கையெழுத்து போட்ட உங்களுக்கும் சிபில் ஸ்கோர் குறையத் தொடங்கும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் லோன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். வங்கிகள், ஒருவர் தான் வாங்கிய லோனை எப்படி செலுத்தியிருக்கிறார் என்பதை சிபில் ஸ்கோரை வைத்து தெரிந்து கொண்ட பின்பு தான் மறுமுறை லோன் வழங்கும்.
கூடுதலாக லோன் பெற்றவர் செலுத்தாத தொகையை உங்கள் பெயரில் இருக்கும் கடனாக தான் வங்கிகள் கணக்கிடும். இதனால் பிற்காலத்தில் ஹோம் லோன், கார் லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றை பெற முடியாமல் போகலாம்.
பாதியில் ஜாமின் பொறுப்பில் இருந்து விலக முடியுமா?: இதற்கு வாய்ப்புகள் குறைவு. அப்படியே விலக வேண்டுமானால் வங்கி முதலில் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு கடன் பெற்ற நபர் உங்களுக்கு பதிலாக வேறு ஒரு கேரண்டி கையெழுத்து போடுபவரை வங்கிக்கு வழங்க வேண்டும். அப்பொழுதும் உங்களை விடுவிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது வங்கியை பொறுத்தது.
எனவே ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு முன்பு உண்மையிலேயே லோன் பெறுபவர் அந்த கடனை திருப்பிச் செலுத்த தகுதியுடையவரா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல நீங்கள் கையெழுத்து போடுவதற்கு முன்பு வங்கிகள் வழங்கும் அக்ரிமெண்ட்டை சரியாக படித்துக் கொள்ளுங்கள். லோன் தொகை உண்மையிலேயே எவ்வளவு? எத்தனை ஆண்டு காலம் செலுத்த வேண்டும்? எவ்வளவு வட்டி? போன்றவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வேலை கடன் பெற்றவர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் அந்த கடனை உங்களால் நிர்வகிக்க முடியுமா? அந்த அளவுக்கு பொருளாதார உங்களிடம் உள்ளதா? என்பதையும் சிந்திங்கள். வெறும் பாசம், நட்பு போன்ற விஷயங்களுக்காக உணர்ச்சிவசப்பட்டு கையெழுத்து போட்டால் பிற்காலத்தில் நிதி நெருக்கடியில் சிக்கும் வாய்ப்பு அதிகம்!


Click it and Unblock the Notifications