ஏஐ தொழில்நுட்பத்தால் பல துறைகள் மாறி வரும் சூழ்நிலையில் தற்போகு ஏஐ துறையே தலைகீழாக மாறி வருகிறது. வைப் கோடிங் என்பது என்ன என உலக மக்கள் கற்றுக்கொண்டு வரும் வேளையில் இதை தலைகீழாக மாற்றும் வகையில் புதிய விஷயம் வந்துள்ளது.
சாப்ட்வேர் டெவலப்மென்ட்-ல் மக்கள் நேரடியாக Prompt எழுதும் நடைமுறை மெல்ல மறைந்து வருகிறது. முதலில் கோடிங் எழுதுவது தான் மறைந்து வருகிறது என கூறப்பட்டது, தற்போது கோடிங் எழுதுவதற்காக பயன்படுத்தப்படும் ப்ராம்ட் எழுதுவதும் குறைந்து வருகிறது என கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக, ஒரு ஏஐ மற்றொரு ஏஐ-க்கு அறிவுறுத்தி, கண்காணித்து, தொடர்ந்து மேம்படுத்தும் புதிய அணுகுமுறை வேகமாக கவனம் பெற்று வருகிறது. இதன் பெயர் "லூப் இன்ஜினியரிங்" (Loop Engineering) என்று அழைக்கப்படுகிறது.

Prompt Engineering-க்கு மாற்றாக Loop Engineering
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் கோட் உருவாக்குநர்களில் ஒருவரான போரிஸ் செர்னி, தான் நேரடியாக Prompt எழுதுவதில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, ஒரு ஏஐ ஏஜெண்ட் (AI Agent) மற்றொரு கிளாட் ஏஐ-க்கு தேவையான Prompt-களை உருவாக்கி, பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது என்று அவர் விளக்கியுள்ளார். இதுவே "லூப் இன்ஜினியரிங்" என்ற புதிய அணுகுமுறையின் அடிப்படையாக உள்ளது.
இந்த முறையில், மனிதர்களின் நேரடி தலையீடு மிகவும் குறைவாக இருக்கும். ஏஐ அமைப்புகள் தாங்களாகவே பணிகளைத் திட்டமிட்டு, செயல்படுத்தி, மேம்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் 100 பேர் ஒரு வருடம் செய்யும் வேலையை 10 பேரை வைத்து ஒரு மாதத்திற்குள் முடிக்க முடியும்.
இது Vibe Coding-ஐ தாண்டி அடுத்த கட்டம்
கடந்த சில மாதங்களாக Vibe Coding என்ற நடைமுறை பரவலாக பேசப்பட்டது. இதில், டெவலப்பர்கள் தாங்கள் தேவையை இயல்பான பேச்சுவழக்கு மொழியில் விளக்கினால், ஏஐ அதற்கான கோடிங்-ஐ உருவாக்கும்.
ஆனால் புதிய Loop Engineering முறையில், பயனர் ஒரு பெரிய இலக்கை மட்டும் வழங்கினால் போதும். அதன்பிறகு ஏஐ முகவர்கள் தாங்களாகவே பணிகளைத் திட்டமிட்டு, குறியீட்டை உருவாக்கி, அதன் தரத்தைச் சரிபார்த்து, தேவையான திருத்தங்களைச் செய்து, இலக்கு நிறைவேறும் வரை தொடர்ந்து செயல்படும். இதில் மனிதர்களின் நேரடி தலையீடு மிகக் குறைவாக இருக்கும்.
ஒரு ஏஐ எழுதும் குறியீட்டை மற்றொரு ஏஐ பரிசோதிக்கும்
இந்த புதிய அமைப்பில், ஒரு ஏஐ குறியீட்டை எழுதும். மற்றொரு ஏஐ அதில் பிழைகள் உள்ளனவா என்று தானாக ஆய்வு செய்யும். இன்னொரு ஏஐ மென்பொருள் களஞ்சியத்தை தொடர்ந்து கண்காணித்து, நிலுவையில் உள்ள பணிகளை கண்டறிந்து, அவற்றை தனித்தனி ஏஐ முகவர்களுக்கு ஒதுக்கும்.
இதனால் மென்பொருள் மேம்பாட்டு செயல்முறை அதிகப்படியான ஆட்டோமேஷன் உடன் செயல்படுத்த முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டால், மென்பொருள் உருவாக்கும் வேகம் மற்றும் தரம் இரண்டும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஐ-க்கு Prompt கொடுப்பதை நிறுத்துங்கள்
ஓபன் கிளா (OpenClaw) உருவாக்குநரும் ஓபன்ஏஐ பொறியாளருமான பீட்டர் ஸ்டெய்ன்பெர்கர், "கோடிங் ஏஐ-களுக்கு தொடர்ந்து Prompt கொடுக்க வேண்டிய காலம் முடிந்து வருகிறது. அதற்கு பதிலாக, அந்த ஏஐ-களுக்கு Prompt உருவாக்கும் லூப் அமைப்புகளை வடிவமைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து தொழில்நுட்ப உலகில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இனி டெவலப்பர்கள் Prompt எழுதுவதற்கு பதிலாக, ஏஐ அமைப்புகளை எப்படி தானாகவே இயங்க வைப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பலர் கருதுகின்றனர்.
எதிர்கால எப்படி இருக்கும்?
மென்பொருள் துறையில் ஏஐ பயன்பாடு ஏற்கனவே வேகமாக அதிகரித்து வருகிறது. Loop Engineering நடைமுறை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், எதிர்காலத்தில் மென்பொருள் பொறியாளர்களின் பணி முழுமையாக கோடிங் எழுதுவது மட்டுமல்ல. ஏஐ முகவர்கள் இணைந்து செயல்படும் தன்னியக்க அமைப்புகளை வடிவமைத்து, அவற்றை கண்காணித்து, தேவையான கட்டுப்பாடுகளை அமைப்பதாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதே நேரத்தில், இந்த முறை அதிக அளவிலான ஏஐ Token-களை பயன்படுத்தக்கூடும் என்பதால், நிறுவனங்கள் செலவுக் கட்டுப்பாடு மற்றும் தரக் கண்காணிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டியிருக்கும் என்றும் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த மாற்றம், எதிர்காலத்தில் மென்பொருள் உருவாக்கும் விதத்தையே மாற்றியமைக்கும் என்று தொழில்நுட்ப உலகம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications