சொந்த வீட்டில் குடியிருந்தால் மட்டும் அந்த வீடு உங்களுக்கு சொந்தமாகிவிடாது. வீட்டின் பத்திரமும் முறையாக உங்களுடைய பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பலருக்கு தங்களுடைய ஆகப்பெரிய சேமிப்பு என்னவோ அவர்கள் கட்டி வைத்திருக்கும் சொந்த வீடு தான். இதில் சிலர் நிலங்களாகவும் வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சொத்தின் முழு அதிகாரமும், உரிமையும் நமக்கு இருக்கிறது என்பதை முடிவு செய்வதே அந்த சொத்தின் அசல் பத்திரம் தான்.
இப்படி முக்கியமான பத்திரம் காணாமல் போய்விட்டால் ஒரு சிலருக்கு என்ன செய்வது என்றே தெரியாது. இதனால் எதிர்காலத்தில் சொத்தை விற்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை வந்துவிடும். ஆனால் இதற்கு பயப்படத் தேவையில்லை. ஒருவேளை உங்களுடைய சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் பதற்றம் அடையாமல் சட்டபூர்வமாக சில விஷயங்களை செய்ய வேண்டும்.
FIR பதிவு செய்தல்: பத்திரம் காணாமல் போனது தெரிந்தவுடன் முதலில் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அதற்கு அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குச் செல்லலாம். அங்கு உங்களுடைய சொத்து ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் தொலைந்து போனதை தெளிவாகக் குறிப்பிடவேண்டும். மேலும் எந்த இடத்தில் உங்களுடைய பத்திரம் தொலைந்து போனது?, சொத்தின் விவரங்கள் என்ன? என்பதையும் தெள்ளத் தெளிவாக குறிப்பிட வேண்டும். நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் FIR பதிவு செய்யலாம். நீங்கள் புகார் அளித்து உடனேயே காவல்துறை சார்பாக உங்களுக்கு எஃப்ஐஆர் காப்பி கொடுக்கப்படும். அதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பத்திரம் பெற இது மிக மிக முக்கியம்.

பொது அறிவிப்பை வெளியிடலாம்: அடுத்த கட்டமாக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பகுதியில் முன்னணியில் இருக்கும் நாளிதழை தொடர்பு கொள்வதுதான். அதில் சிலர் பொது அறிவிப்பு வெளியிடுவார்களே.. அதே போல நீங்களும் உங்கள் பத்திரம் காணாமல் போனது குறித்து பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். இதில் உங்களுடைய சொத்தின் விவரங்கள், தொலைந்து போன பத்திரத்தின் நம்பர் தெரிந்தால் அந்த நம்பர் மற்றும் உங்களுடைய தொடர்பு எண் ஆகியவற்றை வழங்க வேண்டும். யாராவது உங்களுடைய பத்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவர்கள் பெயருக்கு மாற்றுவதை இதுபோன்ற அறிவிப்புகள் தடுக்கும். மேலும் உங்கள் சொத்தின் உரிமை உங்களிடம் தான் இருக்கிறது. என்பதை உலகறியச் செய்யும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக செயல்படும்.
ஹவுசிங் சொசைட்டி: கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலமாக பெறப்பட்ட சொத்து எனில் நீங்கள் மீண்டும் அந்த சங்கங்களிலேயே விண்ணப்பித்து சான்றிதழை பெறலாம். விண்ணப்பிக்கும் போது நீங்கள் பதிவு செய்த எஃப்ஐஆர் மற்றும் செய்தித்தாள் அறிவிப்பின் ஜெராக்ஸ் காபி தேவைப்படும். வீடு வசதி சங்கங்கள் மறுபடியும் உங்களுக்கு பத்திரத்தை வழங்க சிறு கட்டணம் வசூலிக்கும்.
அடுத்ததாக வழக்கறிஞர் ஒருவரின் முன்னிலையில் ஒரு உறுதிமொழி பத்திரத்தை தயார் செய்ய வேண்டும் அதில் சொத்தின் விபரங்கள் மற்றும் பத்திரம் தொலைந்து போன இடத்தை குறிப்பிட வேண்டும். மேலும் பத்திரத்தை தேட நீங்கள் என்ன முயற்சி எடுத்து இருக்கிறீர்கள்? என்பதை எழுதி ஒரு நோட்டரி அதிகாரி முன்பு அட்டஸ்டேஷன் பெற வேண்டும்.
மீண்டும் விண்ணப்பியுங்கள்: நீங்கள் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் சொத்தை பதிவு செய்தீர்களோ? அங்கே சென்று மீண்டும் கிரைய பத்திரம் பெற விண்ணப்பிக்க வேண்டும். இதை "டூப்ளிகேட் சேல் டீட்" என்று கூறுவார்கள். இதற்கு முன்பு பதிவு செய்த எஃப்ஐஆர் மற்றும் நாளிதழ் விளம்பரம் போன்றவற்றையும் தேவைப்பட்டால் சமர்ப்பிக்கலாம் .தற்போது நீங்கள் பதியும் புதிய பத்திரத்திற்கான கட்டணத்தை செலுத்தி பத்திரத்தை பெறலாம்.
சொத்து உண்மையிலேயே உங்களுடையதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் எப்படி டூப்ளிகேட் பாத்திரம் தயார் செய்கிறீர்களோ இதையே மோசடிக்காரர்களும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே உங்களுடைய பத்திரம் தொலைந்து விட்டால் எதிர்காலத்தில் போலியான பத்திரங்கள் பெறப்படுவதை தவிர்க்க, காலம் கடத்தாமல் மேலே கூறப்பட்டுள்ள நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்.


Click it and Unblock the Notifications