சென்னை: ரயில் பயணம் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதற்கு மிக முக்கிய காரணம் பேருந்து கட்டணங்களை விட ரயில் பயணங்களுக்கு கட்டணங்கள் குறைவாகவே உள்ளது. இதனால் பலரும் முதன்மை விருப்பமாக ரயில் பயணங்களை தேர்ந்தெடுக்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில் தெரியாமல், உங்கள் டிக்கெட் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ரயில் பயணத்தின் போது உங்கள் டிக்கெட்டை ஆதாரமாக வைத்திருப்பது அவசியம். நீங்கள் டிக்கெட்டை இழந்தாலோ அல்லது சீட் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்தாலோ கடுமையான அபராதம் விதிக்கப்படும். சிலர் தங்களுடைய டிக்கெட் தொலைந்து விட்டால் உடனே பயணம் செய்ய முடியாது என்று நினைத்துக் கொள்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் ரயில்வே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம், டிக்கெட் கவுண்டரிலோ அல்லது TTE உதவியின் மூலமாகவோ டூப்ளிகேட் டிக்கெட்-ஐ பெற்றுக் கொள்ளலாம். பயணிகள் TTE அல்லது டிக்கெட் கவுன்டரை தொடர்புகொண்டு குறைந்த கட்டணத்தில், எளிதாக டூப்ளிகேட் டிக்கெட்டைப் பெறலாம்.
இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான indianrail.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று டூப்ளிகேட் டிக்கெட் பெறலாம். ஸ்லீப்பர் மற்றும் செகண்ட் ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு டூப்ளிகேட் டிக்கெட் பெற ரூ. 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஏசி கோச்சில் நீங்கள் இருக்கை பெற்றிருந்தால், டூப்ளிகேட் டிக்கெட் பெறுவதற்கு ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும்.
அதே போல டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பிறகு கிழிந்திருந்தால், கட்டணத்தில் 25 சதவீதம் செலுத்திய பிறகு அவருக்கு டூப்ளிகேட் டிக்கெட் வழங்கப்படும். காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு டூப்ளிகேட் டிக்கெட் வழங்கபடாது.
டூப்ளிகேட் டிக்கெட் பெற்ற பிறகு அசல் டிக்கெட் கிடைத்தால் என்ன செய்வது?: உங்கள் தொலைந்து போன அசல் டிக்கெட் ரயில் புறப்படுவதற்கு முன்பு கிடைத்தால், டூப்ளிகேட் டிக்கெட்டை ரயில்வே கவுண்ட்டரில் ஒப்படைத்து, அசல் டிக்கெட்டைக் காட்டி பணத்தைத் திருப்பிப் பெறலாம்.
எனவே தக்க முன்னேற்பாடுகள் செய்து கொண்டு பயணம் செய்வது எப்பொழுதும் சிறந்த ஒன்றாக இருக்கும். மேலும் டிக்கெட்டை பாதுகாப்பாக வைத்திருப்பது, உங்களுக்கு வீண் செலவு ஏற்படுவதைத் தவிர்க்கும். ரயில்வே விதிமுறைகளைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தால், அவசர சூழ்நிலைகளில் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications