இந்தியா தன்னுடைய எல்பிஜி கேஸ் தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி வாயிலாக தான் பூர்த்தி செய்து கொள்கிறது. அதாவது இந்தியாவில் நாம் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் தொடங்கி உணவகங்கள், தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் மற்றும் உற்பத்தி துறைகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸ் உள்ளிட்ட அனைத்திற்குமே வெளிநாட்டில் இருந்து தான் எல்பிஜி இறக்குமதி செய்கிறோம்.
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா நாடுகளில் இருந்து தான் நமக்குத் தேவையான பெரும் அளவிலான எல்பிஜி கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ தாக்குதலை நடத்தின. இந்த போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. எனவே வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்பிஜி வரத்து நின்று போனது. இதனை அடுத்து இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது.

முதல் கட்டமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு தான் முன்னுரிமை என அறிவித்தது மத்திய அரசு. அதே வேளையில் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால அளவு நீட்டிக்கப்பட்டது. தற்போது நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் 25 நாட்களுக்கு ஒரு முறையும் கிராமங்களில் இருப்பவர்கள் 45 நாட்களுக்கு ஒரு முறையும் சிலிண்டர் புக் செய்யலாம்.
அப்படியே சிலிண்டர் புக் செய்தாலும் முன்பை போல உடனே கிடைப்பது இல்லை. ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிறது என ஏராளமான வாடிக்கையாளர்கள் புகார் கூறுகின்றனர். வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு , கட்டுப்பாடு இருப்பதால் டீ, காஃபி, உணவுகளின் விலைகள் உயர்ந்துவிட்டன. இந்த பிரச்சனை எப்போதுதான் தீரும் என ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர்.
இத்தகைய சூழலில் இந்தியாவில் தற்போதுள்ள சூழல் சீராவதற்கு மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மணி கண்ட்ரோல் செய்தி கூறுகிறது. ஈரான் போரில் பாதிக்கப்பட்டுள்ள சப்ளையர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் படி பார்த்தால் நிலைமை சீரடைவதற்கு குறைந்தது மூன்று ஆண்டுகளாவது தேவைப்படும் என கூறினார்களாம். அப்படி பார்க்கும் போது இந்தியாவில் பழைய நிலைக்கு கேஸ் விநியோகம் சீராக 3 முதல் 4 ஆண்டுகள் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.
போர் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்து பழைய நிலைக்கு எல்பிஜி சப்ளை திரும்புவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என வளைகுடாவில் இருக்கும் சப்ளையர்களே கூறியிருக்கிறார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மத்திய அரசு உள்நாட்டிலேயே எல்பிஜி உற்பத்தியை தீவிர படுத்தவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து எல்பிஜி வாங்குவதற்கும் முன்னுரிமை தந்து வருகிறது.
வாய்ப்புள்ள வாடிக்கையாளர்கள் எல்பிஜி கேஸ் இணைப்புக்கு பதில் பிஎன்ஜி இணைப்புக்கு மாற்றக்கூடிய சாதியம் இருந்தால் அதற்கு மாறிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது மத்திய அரசு.


Click it and Unblock the Notifications