ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கும். சர்வதேச சந்தை நிலவரங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப சிலிண்டர் விலை மாற்றப்படுவது வாடிக்கை.
தற்போது ஈரான் போர் முடிவுக்கே வராமல் ஒரு மாதத்திற்கும் மேல் நீடிக்கிறது. இதனால் இந்தியாவுக்கு எல்பிஜி வரத்து நின்று போயுள்ளது. இந்தியா வளைகுடா நாடுகளை தவிர்த்து மாற்று ஆதாரங்களில் இருந்து எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்த சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலைகளை மாற்றி அமைத்துள்ளன.

அந்த வகையில் இன்று முதல் சென்னையில் வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் போன்ற வணிக நோக்கத்தில் செயல்படக்கூடிய நிறுவனங்களுக்கு 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த சிலிண்டரின் விலை 2043.50 ரூபாயாக இருந்த நிலையில் 203 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் வணிக சிலிண்டர் விலை 2246.50 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
ஈரான் போர் நீடிப்பதன் காரணமாக இந்தியாவுக்கு எல்பிஜி வரத்து குறைந்து போயிருக்கிறது. இந்த சூழலில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன. இது டீக்கடை மற்றும் உணவகங்கள் வைத்து நடத்தி வருபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் டீக்கடைகளில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

இந்த சூழலில் சிலிண்டரின் விலையும் இந்த மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்டிருப்பதால் மேலும் பொருட்களின் விலை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 1849.50 ரூபாயாக தான் இருந்தது. அதுவே படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்றைய தினம் 2246.50 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. அதாவது இந்த நான்கு மாதத்தில் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 397 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது.
அதே வேளையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு கேஸ் சிலிண்டரின் விலை 928.50 ரூபாயாக தொடர்ந்து நீடிக்கிறது. எனவே இல்லத்தரசிகளுக்கு இந்த முறை பிரச்சினை இல்லை. சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி 868.50 ரூபாயாக இருந்த வீட்டு சிலிண்டர் விலை தற்போது 928.50 ரூபாயாக உள்ளது. ஈரான் போர் நீடிப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்த பதற்றம் தணிந்து நிலைமை சீரடையும் போது விலை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


Click it and Unblock the Notifications