மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் இதுவரையில் வணிக சிலிண்டர் விலை உயர்வின் வாயிலாக விலை உயர்வை கட்டுபடுத்தி வந்த மத்திய அரசின் எரிவாயு நிறுவனங்கள், தற்போது விலை உயர்வை ஈடு செய்ய முடியாமல் தற்போது வீட்டில் பயன்படுத்தப்படும் எல்பிஜி (சமையல் எரிவாயு) சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தாலும், உற்பத்தி குறைக்கப்பட்டோ அல்லது நிறுத்தப்பட்ட காரணத்தால் சந்தையில் சப்ளை குறைந்துள்ளது. இதன் வாயிலாக உலகின் அனைத்து நாடுகளிலும் தற்போது பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்த்தியாக வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இதன் எதிரொலியாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எரிவாயு விநியோக நிறுவனங்கள் வீட்டில் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர் விலையை 60 ரூபாய் வரையில் உயர்ந்தியுள்ளது. இந்த உயர்வு மார்ச் 7 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (IOC) இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, டெல்லியில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை இப்போது ரூ.913 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் ரூ.912.50, கொல்கத்தாவில் ரூ.939, சென்னையில் ரூ.928.50 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் விற்பனை வரி வேறுபாட்டின் காரணமாக எல்பிஜி சிலிண்டர் விலை மாறுபடுகிறது. இது கடந்த 11 மாதங்களில் இரண்டாவது உயர்வாகும். கடந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.50 உயர்வு ஏற்பட்டது.
உயர்வுக்கு முக்கிய காரணம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரண்டு ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. கத்தார் எரிசக்தி அமைச்சர் சாட் அல்-காபி, வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி விரைவில் நின்றுவிடும் என்று எச்சரித்தார்.
கத்தார் எனர்ஜி நிறுவனம் தனது மிகப்பெரிய எல்என்ஜி ஏற்றுமதி நிலையத்தில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. சந்தையில் எல்பிஜி சப்ளை பெரிய அளவில் பாதித்துள்ளது. இது தான் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடல் அச்சம்
உலகின் முக்கிய எரிபொருள் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கைப்பற்றி மொத்தமாக மூடியுள்ளது. உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் இந்த பாதையில் செல்கிறது. இது மூடப்பட்டு உள்ளதால் கச்சா எண்ணெய் விலை $100-க்கு மேல் உயரும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். இது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அவர் கூறினார்.
இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது. ஹார்முஸ் வழியாக இந்தியாவின் கிட்டத்தட்ட பாதி எண்ணெய் வருகிறது. எல்பிஜி தேவையில் 80-85 சதவீதம் அரபு நாடுகளில் இருந்து வருகிறது. இவை ஹார்முஸ் வழியாகத்தான் வருகின்றன.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் நீடித்தால் எல்பிஜி பற்றாக்குறை ஏற்படும். இந்தியாவிடம் எல்பிஜிக்கு பெரிய இருப்பு இல்லை. பெட்ரோல்-டீசலுக்கு 70-80 நாட்கள் இருப்பு உள்ளது. ஆனால் எல்பிஜி மற்றும் எல்என்ஜிக்கு பெரிய இருப்பு இல்லை. இதனால் தொடர்ந்து வாங்க வேண்டிய கட்டாயமும், விலை உயர்த்த வேண்டிய நெருக்கடியும் உருவாகியுள்ளது.
அரசு நிலைப்பாடு
எண்ணெய் விலை உயர்ந்தாலும், பெட்ரோல்-டீசல் விலை உடனடியாக உயராது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2022 ஏப்ரல் முதல் விலை மாற்றப்படவில்லை. ஆனால் எல்பிஜி விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கலாம். இதேவேளையில் இந்தியாவில் பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் காரணத்தால் எல்பிஜி விலை உயர்வு முக்கிய விவாதமாக மாறும்.


Click it and Unblock the Notifications