உலகின் முக்கிய கடல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் மீதான போரின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து நடைபெறும்.
தற்போது ஈரான் ராணுவம் இப்பகுதியை கைப்பற்றியிருக்கும் காரணத்தால் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்ட நிலையில், இந்தியாவுக்கு எல்பிஜி விநியோகத்தில் சவால் உருவாகியுள்ளது.
மத்திய அரசு இந்த நிலைமையை கவனமாக கையாண்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் (இண்டர்-மினிஸ்டீரியல் பிரீஃபிங்) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூட்டு செயலாளர் சுஜாதா சர்மா முக்கிய தகவல்களைப் பகிர்ந்தார்.

மக்கள் தேவையில்லாமல் அச்சத்தில் எல்பிஜி சிலிண்டர்களை அதிகமாக பதிவு செய்வதால் சிலிண்டர் விநியோக அமைப்பின் மீது அழுத்தம் ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஒரே நாளில் சுமார் 70 லட்சம் எல்பிஜி பதிவுகள் நடந்துள்ளன.
அரசு பலமுறை தேவைக்கு அதிகமாக சேமித்து வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தும் இந்த நிலை தொடர்கிறது. இதனால் விநியோக அமைப்பு சிரமத்தை சந்திக்கிறது. எனவே, பொதுமக்கள் அமைதியாக இருந்து தேவைக்கு மட்டும் பதிவு செய்யுமாறு அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி சுமார் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த உற்பத்தி முழுவதும் வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வணிக ரீதியான எல்பிஜி விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டு, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வீட்டு சமையலுக்கு எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடிந்துள்ளது.
மேலும், இறக்குமதி கப்பல்கள் பாதுகாப்பாக வருவதற்கான முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 'நந்தா தேவி' என்ற இந்திய எல்பிஜி டேங்கர் கப்பல் சுமார் 46,000 மெட்ரிக் டன் எல்பிஜியுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை குஜராத்தின் வடினார் துறைமுகத்தை அடைந்தது.
இதற்கு முன் திங்களன்று 'ஷிவாலிக்' என்ற மற்றொரு இந்திய எல்பிஜி கப்பல் சுமார் 40,000 மெட்ரிக் டன் எல்பிஜியுடன் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை சென்றடைந்தது. இந்த இரு கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து வந்துள்ளன.
இந்த கப்பல்களின் பயணத்தை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இணைந்து ஒருங்கிணைத்து கொண்டு வந்துள்ளது. இந்திய கடற்படை மற்றும் ஈரான் கடற்படையின் உதவியுடன் இந்த ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க முடிந்தது.
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய எல்பிஜி இறக்குமதியாளராக உள்ளது. இந்திய பயன்படுத்தப்படும் எல்பிஜியில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானவை (சுமார் 90 சதவீதம்) மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகின்றன. இந்த நெருக்கடியால் சமையல் எரிவாயு விநியோகத்தில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications