மானிய விலையில் LPG கேஸ் சிலிண்டர் பெரும் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கட்டாயம் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை செய்திருக்க வேண்டும். இதை செய்யவில்லை என்றாலும் கேஸ் கிடைப்பது நின்று விடாது. ஆனால் ஆதார் சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் எல்பிஜி கிடைக்காது. அதற்கு பதிலாக சந்தை விலையில் தான் பெற முடியும்.
அக்டோபர் 1 முதல் என்னென்ன மாற்றம் வரவிருக்கிறது?: ஏற்கனவே இந்த ஆதார் சரிபார்ப்பை முடித்த வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும். தீர்ந்து போனால் முன்பதிவு செய்து மீண்டும் பெறலாம்.

பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை முடித்த வாடிக்கையாளர்கள் மீண்டும் இந்த செயல்முறையை செய்யத் தேவையில்லை. ஆனால் முடிக்காத வாடிக்கையாளர்கள் இனி மானிய விலையில் எல்பிஜி கேஸ் முன்பதிவு செய்ய முடியாது.
நாளையுடன் செப்டம்பர் மாதம் முடிகிறது. எனவே மானிய விலையில் எல்பிஜி பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் உங்களுடைய டிஸ்ட்ரிபியூட்டரை தொடர்பு கொண்டு ஆதார் சரிபார்ப்பை முடிக்கலாம் அல்லது இந்தியன் ஆயில் ஒன், பாரத் கேஸ் அல்லது ஹெச்பி பே போன்ற ஆப் மூலமாகவும் இதை செய்து முடிக்கலாம். இல்லை என்றாலும் நேராக டிஸ்ட்ரிபியூட்டர் அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களின் உதவியுடன் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை பூர்த்தி செய்யலாம்.
இந்தச் செயல்முறையை செய்ய முடியாத அல்லது விரும்பாத வாடிக்கையாளராக இருந்தால் ஓஎம்சி நிறுவனங்களை தொடர்பு கொண்டு 10 அல்லது 5 கிலோ சிலிண்டரை சந்தை விலையில் பெற்று பயன்படுத்தலாம். இதற்கு அந்தந்த நிறுவனங்களின் இணையதளங்கள் அப்ளிகேஷன், வாட்ஸ் அப், சேட் பாட் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
ஏன் இந்த நடவடிக்கை?: முக்கியமாக முறைகேடுகளை தடுப்பதற்காகத்தான் இந்த நடைமுறையை அரசு அமலுக்கு கொண்டு வருகிறது. மானிய விலையில் எல்பிஜி பெற தகுதியற்றவர்களும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதைக் கண்டறியவும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு மானிய விலை கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் அரசு இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் தற்போது 27.43 கோடி பேர் எல்பிஜி பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதில் 89.9 சதவீதத்தினர் ஆதார் சரிபார்ப்பை முடித்து விட்டனர்.
இந்த நடவடிக்கையை அரசு கையில் எடுப்பது ஒன்றும் புதிதல்ல. 2023-ஆம் ஆண்டு முதல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரையில் ஆதார் சரிபார்ப்பு செய்யப்படாத வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளவும் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த செயல்முறையை முடிப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஜூலை 31 ஆக மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 23, ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7, செப்டம்பர் 14.. இப்படி பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது அக்டோபர் 1-ஆம் தேதி வரை டெட்லைன் வழங்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை எப்படி செய்வது?: LPG விநியோகம் செய்ய வரும் ஊழியரிடம் சொன்னால் அவர் அந்த ஓஎம்சி நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலமாக சரிபார்ப்பை செய்து தருவார் அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் அலுவலகத்திற்கும் நேரில் சென்று செய்யலாம். இதையும் விரும்பாதவர்கள் அந்தந்த ஓஎம்சி நிறுவனங்களின் மொபைல் ஆப் மூலம் தாங்களாகவே முடிக்கலாம்.


Click it and Unblock the Notifications

