ஈரான் போர் தொடங்கியது முதலே உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜிக்கு இந்தியா வளைகுடா நாடுகளையே சார்ந்திருப்பதால் இந்த பாதிப்பு இன்னும் அதிகமாக உள்ளது.
போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. அதாவது தங்களின் தடையை மீறி இந்த பகுதியை எந்த கப்பல் கடந்தாலும் அதனை வீழ்த்துவோம் என எச்சரித்தது. கிட்டதட்ட 3 மாத காலமாக இந்த வழியே கப்பல்கள் செல்லவில்லை. இதனால் இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. முதல்கட்டமான இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் (19 கிலோ) விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன.

வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் (14.2 கிலோ) விநியோகத்திலும் பல மாற்றங்கள் வந்தன. குறிப்பாக புக்கிங் கால இடைவெளி நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சிலிண்டர் விலைகளும் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் 990 ரூபாய் 50 காசு உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிர்ச்சி கொடுத்தன. இதன்படி ஒரு சிலிண்டர் விலை ரூ.3,237-க்கு விற்பனையாகி வந்தது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்யும். அந்த வகையில் இன்றும் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து ரூ.3,283 ஆக விற்பனை செய்யப்படுகிறது.வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.928.50 ஆக விற்பனையாகிறது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் முன்னுரிமை அடிப்படையில் தான் மேற்கொள்கின்றன. இன்னும் முழுமையாக அனைத்து பயன்பாட்டாளர்களுக்கு சென்றடையவில்லை. இந்நிலையில் அதன் விலையும் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல் மற்றும் சிற்றுண்டி கடைக்காரர்கள் சிலிண்டர் கிடைப்பதே தட்டுப்பாடாக இருக்கிறது அதன் விலையும் உயர்த்தப்பட்டு கொண்டே வருகிறது என்பதால் வேறு வழியில்லாமல் டீ, காஃபி மற்றும் உணவுகளின் விலைகளை உயர்த்தி வருகின்றனர்.
வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை என்பது சாமானிய மக்களுக்கு ஆறுதலான செய்தி. இருந்தாலும் அந்த நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை - ஜூன் 1) சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.107.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.99.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. CNG ஒரு கிலோ ரூ.95.00 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications

