இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு அதிகரித்து இருக்கிறது. வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை காரணமாக கூறி எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்திருக்கின்றன.
வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் கிடைக்காததால் சென்னை, பெங்களூரு , மும்பை என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. திறக்கப்பட்டுள்ள சில உணவகங்களிலும் உணவுகளின் பட்டியல் குறைக்கப்பட்டு விட்டன. தோசை, ஆம்லெட் உள்ளிட்டவை கிடைக்காது, வெரைட்டியான உணவுகள் கிடைக்காது என்று உணவகங்களில் போர்டுகளே வைக்கப்பட்டிருக்கின்றன.

இதன் காரணமாக பேச்சுலர்கள் விடுதிகளில் தங்கி இருக்கக்கூடிய மாணவர்கள் என ஹோட்டல் உணவுகளை நம்பி இருக்கக்கூடிய லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இது தவிர வீடுகளுக்கு சிலிண்டர் வேண்டும் என முன்பதிவு செய்தாலும் இதற்கு முன்பு ஒன்று இரண்டு நாட்களிலேயே வந்துவிடும் ஆனால் தற்போது ஒரு வாரமானாலும் சிலிண்டர் டெலிவரி செய்யப்படுவதில்லை என ஏராளமான மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
சிலிண்டர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசம் அடைந்து வரக்கூடிய சூழலில் இந்தியாவில் இன்டக்ஷன் அடுப்புகளின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. சிலிண்டர் தட்டுப்பாடு எப்போது சரியாகும் என்பது தெரியாததால் ஏராளமான பேச்சுலர்களும், குடும்பத்தினரும் மின்சாரத்தில் இயங்க கூடிய இன்டக்ஷன் அடுப்புகள் பக்கம் மாற தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக இன்டக்ஷன் அடுப்பு மற்றும் இன்டக்ஷனில் பயன்படுத்தும் வகையிலான சமையலறை பொருட்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களின் பங்குகள் 13% வரை உயர்வு கண்டிருக்கின்றன. போரோசில், பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனங்களின் பங்குகள் முறையே 13 மற்றும் 7 சதவீதம் என உயர்ந்திருக்கின்றன. அதேபோல டிடிகே பிரஸ்டீஜ் நிறுவனத்தின் பங்கு 7 சதவீதமும் ஹாவ்கின்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5% உயர்வு கண்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 33.13 மில்லியன் டன் எல்பிஜி பயன்படுத்தப்படுகிறது. இதில் 87 சதவீத எல்பிஜி வீட்டு உபயோக பயன்பாட்டுக்காகவே வழங்கப்படுகிறது. மற்றவை உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றில் 62% எல்பிஜியை நாம் வெளிநாடுகளின் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். அதுவும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் இது வருகிறது. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால் இந்த வழியாக இந்தியாவுக்கு வர வேண்டிய எல்பிஜி விநியோகம் தடைபட்டுள்ளது. எல்பிஜி தட்டுப்பாடு குறித்த தகவல் வெளியானது முதலேயே மின்சார அடுப்பு மற்றும் அதில் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கான டிமாண்ட் அதிகரித்து விட்டதாக இத்துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
கொல்கத்தாவின் கோஸ்லா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மணிஸ் கோஸ்லா கடந்த வார இறுதியில் இருந்து மின்சார அடுப்புகள் மற்றும் மின்சார அடுப்புகளில் வைத்து பயன்படுத்தக்கூடிய பொருட்களின் விற்பனை அதிகமாகி இருப்பதாக கூறுகிறார். சிலிண்டர் கிடைக்காது என்பதற்காக மக்கள் முன்கூட்டியே இவற்றை வாங்கி வைக்கின்றனர் என கூறுகிறார். சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்களிலுமே தங்களுடைய கடைகளில் இன்டக்ஷன் அடுப்புகளின் விற்பனை அதிகரித்ததை காண முடிந்ததாக தெரிவிக்கிறார்.
சராசரியாக ஒரு நாளைக்கு 40 இன்டக்ஷன் அடுப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 130 என அதிகரித்து இருக்கிறதாம். நிலைமை சீராகும் வரை இன்டக்ஷன் அடுப்புகளுக்கு டிமாண்ட் இருக்கும் என்கிறார்.


Click it and Unblock the Notifications