இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எடுத்து பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சிலிண்டருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு மானியமாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கிறது.
முதலில் எல்லாம் நிறுவனங்களிடம் அரசு இந்த மானிய தொகையை நேரடியாக வழங்கியது. எனவே 300, 400 ரூபாய் கொடுத்தாலே போது சிலிண்டர் கிடைத்துவிடும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வந்த பிறகு சரியான மக்களுக்கு மானியம் சென்று சேர்வதை உறுதி செய்யக்கூடிய நோக்கத்தில் வாடிக்கையாளர் வங்கி கணக்கிலேயே மானிய தொகையை வரவு வைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி சிலிண்டர் முன்பதிவு செய்து பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் அவர்கள் சிலிண்டர் எடுத்தவுடன் அந்த மானிய தொகை என்பது வரவு வைக்கப்படும்.

இந்நிலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடிய பாரத் கேஸ் ,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இண்டேன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு எச்சரிக்கை தகவலை அனுப்ப தொடங்கி இருக்கின்றன. அதாவது உங்களுடைய ஆண்டு வருமானம் மானியம் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருக்கிறது என்பதால் உங்களுக்கு இனி சிலிண்டர் மானியம் ரத்தாகும் என அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் படி இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி போன்ற நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு "Dear LPG Consumer, as per available income tax records, your (or a linked family member's) gross taxable income exceeds the prescribed limit of ₹10 lakh. If you wish to dispute this, please contact the toll-free number 1800-2333-555 or register your grievance on the portal of your respective oil marketing company within seven days of receipt of this message. If no response is received within the stipulated period, the LPG subsidy may be discontinued thereafter" என மெசேஜில் அலர்ட்டுகளை அனுப்பி இருக்கின்றன.
அதாவது "எல்பிஜி வாடிக்கையாளர்களே வருமான வரி ஆவண பதிவுகளை ஆய்வு செய்வதில் உங்களுடைய வரிக்கு உட்பட்ட வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது. உடனடியாக 1800-2333-555 என்ற நம்பரை தொடர்பு கொண்டு நீங்கள் உங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும். இந்த மெசேஜ் உங்களுக்கு வந்த ஏழு நாட்களுக்குள் அதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு கிடைக்கக்கூடிய மானியம் நிறுத்தப்படும்" என அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தற்போது சந்தை விலைக்கு நேரடியாக சிலிண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் தகுதி உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மானிய தொகை நேரடியாக வரவைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த மானியம் கிடைக்காது. இந்த நிலையில் வருமான வரி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போது சரியான வாடிக்கையாளர்களுக்கு இந்த மானிய தொகை சென்று சேர்வதை உறுதி செய்ய மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் பல்வேறு வாடிக்கையாளர்களும் இவர்கள் போடக்கூடிய மானியமே வெறும் 24 ரூபாய் தான் பல ஆண்டுகளாக இந்த தொகை அப்படியே இருக்கிறது. ஒரு சிலிண்டரையே 1000 ரூபாய் கொடுத்து எடுக்கிறோம், ஆனால் அதில் அரசு தரக்கூடிய மானியம் வெறும் 24 ரூபாய் தான், இப்படி ஒரு மானியத்தை அவர்கள் எதற்கு தர வேண்டும், இல்லை அதை நிறுத்தினால் தான் என்ன ஆகிவிடப்போகிறது என விமர்சனம் செய்திருக்கின்றனர். மேலும் எண்ணெய் நிறுவனங்கள் சாமானிய மக்களின் வருமான வரி ஆவணங்களை எப்படி அணுக முடியும் இது தனி உரிமையை மீறும் செயல் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications

