எல் &டி குழுமத்திற்கு சொந்தமான முன்னணி பன்னாட்டு நிறுவனமான எல்டிஐ மைண்ட்ரீ (LTIMindtree) நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 1,134 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது லாபம் 1.5% குறைவாகும். எல்டிஐ மைண்ட்ரீ நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருமானம் என்பது இந்த காலாண்டில் 9,143 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகமாகும். முந்தைய காலாண்டை விட 3 சதவீதம் உயர்வாகும்.
கூடிய விரைவில் எல்டிஐ மைண்ட்ரீ நிறுவனம் பிரேசில் நாட்டில் அதன் துணை நிறுவனத்தை அமைக்க உள்ளது. புதன்கிழமை நடைபெற்ற நிறுவன வாரிய இயக்குனர்கள் கூட்டத்தில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி எல்டிஐ நிறுவனம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் ஒரு துணை நிறுவனத்தை அமைக்க இருக்கிறது.

எல்டிஐ மைண்ட்ரீ நிறுவனத்தை பொறுத்தவரை அதன் வங்கி மற்றும் நிதி சேவைகள் , இன்சூரன்ஸ் பிரிவுகளில் வருமானம் ஓராண்டு கால இடைவெளியில் 35.2% என வளர்ச்சி அடைந்துள்ளது. அதே வேளையில் தொழில்நுட்பம், மீடியா மற்றும் தகவல் தொடர்பு துறையில் வளர்ச்சி என்பது 25.6% ஆக இருக்கிறது. உற்பத்தி மற்றும் மூலப்பொருட்கள் துறையில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியானது 18.5% என இருக்கிறது.
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனம் புதிதாக நான்கு ஒப்பந்தங்களை கைப்பற்றி உள்ளது. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு முக்கியமான விமான சேவை நிறுவனம் எல்டிஐ நிறுவனத்திடம் புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது. ஜப்பானை சேர்ந்த முன்னணி ஆட்டோமோடிவ் நிறுவனமும் எல்டிஐ நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கான டெஸ்க் சப்போர்ட் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
எல்டிஐ மைண்ட்ரீ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பானது ஜூலை 19ஆம் தேதி பங்குச்சந்தையில் 5,838 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவனம் 1.70 லட்சம் கோடி சந்தை மூலதனம் கொண்டுள்ளது. இந்த நிறுவன பங்குகளில் பிரமோட்டர்கள் 68% , சில்லறை முதலீட்டாளர்கள் 9% வைத்திருக்கின்றனர். உள்நாட்டு நிறுவனங்கள் 8.78% மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் 7.28% பங்குகளை கொண்டுள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் 5.4 சதவீதம் பங்குகளை வாங்கியுள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications