சென்னை: சென்னையில் லூலூ சூப்பர் மார்க்கெட் விரைவில் வர இருக்கிறது என அடிக்கடி தகவல் வெளியாகி வந்த நிலையில் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் தான் இது அமையப்போகிறது என்பது தெரியவந்துள்ளது.
டிடி நெக்ஸ்ட் நாளிதழில் இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி சென்னையில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களிலும் லூலூ ஹைப்பர் மார்க்கெட் நிறுவப்பட இருக்கிறது. மே மாதம் முதல் இது செயல்பாட்டுக்கு வரும் சொல்லப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் கழகம் தங்களுடைய கட்டமைப்புகள் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் சூப்பர் மார்க்கெட் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது.

செனாய் நகர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் சூப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை கிரேஸ் சர்வீஸ் நிறுவனத்திடம் சென்னை மெட்ரோ ரயில் கழகம் ஒப்படைத்துள்ளது. இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் அதற்கான பணிகளை கிரேஸ் சர்வீஸ் நிறுவனம் தீவிரப்படுத்தி இருக்கிறது. அடுத்த மூன்றிலிருந்து நான்கு மாத காலங்களில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் சூப்பர் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
கிரேஸ் சர்வீஸ் நிறுவனத்தின் வசந்தகுமார் அளித்துள்ள பேட்டியில் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உணவகங்கள், பிரபல துணிக்கடைகள் மற்றும் பிற கடைகள் அமைக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார். செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 600 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஒரு சிறிய தியேட்டர் அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.
செனாய் நகரில் ஹைப்பர் மார்க்கெட் வர இருக்கிறது, இதற்காக செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பேஸ்மென்ட் பகுதியில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் பணிகள் நடைபெறுகின்றன என கூறுகிறார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலும் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலும் சூப்பர் மார்க்கெட் அமைய இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய வாகன நிறுத்த வசதிகள் இருப்பதால் நிச்சயம் லூலூ சூப்பர் மார்கெட்டுக்கான இடங்களாக அமையும் என கூறியுள்ளார். மெட்ரோ ரயில் நிலைய கட்டமைப்புகள் மூலம் வருமானத்தை பெருக்க சென்னை மெட்ரோ ரயில் கழகம், சென்னை மெட்ரோ ஆசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவி இருக்கிறது. இந்த நிறுவனம் மெட்ரோ ரயில் சம்பந்தப்பட்ட இடங்களை பயன்படுத்தி எப்படி வருவாயை பெருக்குவது என்பன உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications