இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்படாத நிலையிலும் டிப்ன்பாக்ஸ் அதிகளவில் விற்பனை ஆகி வருகிறது. இதனால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், குறிப்பாக ஆன்லைனில் டிபன்பாக்ஸ் விற்பனை சூடுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திடீர் விற்பனைக்கு என்ன காரணம்..? யார் அதிகளவில் டிபன்பாக்ஸ் வாங்குகிறார்கள்..?!

கொரோனா தொற்று
கொரோனா தொற்று இந்திய மக்களை வீட்டிற்குள்ளேயே கிட்டத்தட்ட ஒரு வருடம் முடக்கிய நிலையில் கடந்த மாதம் நாட்டின் பல பகுதிகளில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற அனுமதி அளித்துள்ளனர். இதனால் அலுவலகத்திற்குச் செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வீட்டு உணவு
மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்திய பிரதேஷ், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அலுவலகத்திற்குச் செல்லும் ஊழியர்கள் மிகவும் கவனமுடன் இருக்கும் காரணத்தால் வீட்டில் இருந்து உணவை கொண்டு செல்லும் முடிவில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாகக் கடந்த ஒரு மாத காலத்தில் டிபன்பாக்ஸ் விற்பனை அதிகரித்துள்ளது.

டப்பர்வேர் இந்தியா
இதுகுறித்த டப்பர்வேர் இந்தியா நிறுவனத்தின் தலைவரான தீபக் சாபரா கூறுகையில், அலுவலகத்திற்கு ஊழியர்கள் அனுமதிக்கும் அளவீடு அதிகரித்த நாளில் இருந்து ஹாட் டிபன் பாக்ஸ் விற்பனை சுமார் 250 சதவீதமும், டிப்ன் பாக்ஸ் கவர் விற்பனை 100 சதவீதமும் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். இது நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் எனத் தெரிவித்துள்ளார்.

விற்பனை சூடுபிடித்தது
இதேபோல் டிபன் பாக்ஸ் தாண்டி பார்மல் ஆடைகள், ஷூ, பேக், வாட்ச் ஆகியவற்றின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. குறிப்பாகப் பார்மல் காலாணிகளின் விற்பனை சுமார் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் சிற்றுண்டிகள் மற்றும் மதிய உணவிற்கான தேடல் இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பார்மல் காலாணிகள்
இதன் மூலம் கடந்த 2 மாதத்தில் பாட்டா நிறுவனம் சிறப்பான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பாட்டா நிறுவனத்தின் தலைமை கலெக்ஷன் ஆபிசர் மேட்டோ கூறுகையில், இதுநாள் வரையில் வேலைக்குச் செல்வோர் Work from Home-ல் பணியாற்றி வந்த நிலையில், தற்போது அலுவலகத்திற்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பார்மல் காலணிகளின் விற்பனை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.