சென்னை: லக்சம்பர்க் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் SES நிறுவனம் உலகின் முன்னணி செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம் ஆசிய பசிபிக் பகுதியில் சிங்கப்பூர்-க்கு அடுத்தாக தனது உலக திறன் மையத்தை (Global Capability Centre - GCC) சென்னையில் திறக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஜிசிசி அலுவலகத்தில் முதல் கட்டமாக 300 முதல் 400 பேர் வரை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களையும், முதலீடுகளையும் ஈர்ப்பதில் முன்னோடியாக இருக்கும் மாநிலத்தில், தமிழ்நாடு முதன்மையாக இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அமைக்கும் அலுவலகத்தை அதிகளவில் தமிழ்நாடு ஈர்த்து வருகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழ்நாடு இந்த ஜிசிசி அலுவலகங்களைச் சென்னையில் மட்டும் அல்லாமல் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை என பல நகரங்களில் ஈர்க்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான நிறுவனமாக SES திகழ்கிறது, SES ஒரு ஸ்பேஸ்டெக் நிறுவனமாகும்.
இந்தியாவில் ஸ்பேஸ்டெக் சேவைத் துறை தனது வளர்ச்சிப் பாதையில் சமீப காலமாகத் தான் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்பத்திலேயே தமிழ்நாட்டில் 5க்கும் அதிகமாக விண்வெளி துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் இருக்கும் வேளையில் இந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சென்னையில் SES தனது டெலிவரி சென்டரை அமைக்க உள்ளது.
SES நிறுவனம் லக்சம்பர்க் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயக்கி வருகிறது. இந்த நிறுவனம் உலகளவில் இருக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு தங்களுடைய கண்டென்ட்-ஐ மக்களுக்கு கொண்டு சேர்க்க ஆடியோ மற்றும் வீடியோ நெட்வொர்க் அளிக்கிறது. இதோடு நிலையான சுற்றுப்பாதை (GEO) மற்றும் நடுத்தர பூமி சுற்றுப்பாதையில் (MEO)) சுமார் 70 செயற்கைக்கோள்களை இயங்கும் நிறுவனமாக உள்ளது.
SES நிறுவனம் - ஜியோ கூட்டணி: 2022 ஆம் ஆண்டில், இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (JPL) மற்றும் SES இணைந்து, அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் வாயிலாக பிராண்ட்பேன்ட் இண்டர்நெட் சேவைகளை இந்தியாவில் வழங்க "ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி லிமிடெட்" என்ற கூட்டணி நிறுவனத்தைத் துவங்கியது. இதில், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் 51% பங்குகளையும், SES 49% பங்குகளையும் கொண்டுள்ளது.
சமீபத்தில் ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி லிமிடெட் கிகாபிட் ஃபைபர் இணையச் சேவை வழங்க இந்திய விண்வெளி ஒழுங்குபடுத்தும் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது. இதன் மூலம் விரைவில் ஜியோ SES கூட்டணி செயற்கைக்கோள் வாயிலாக பிராண்ட்பேன்ட் சேவையைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவில் முதல் முறையாகச் சென்னையில் தனது அலுவலகத்தை அமைத்துள்ளது.
ஜியோ உடனான கூட்டணி காரணமாக SES மும்பையில் அலுவலகத்தை வைத்திருக்கலாம், முகேஷ் அம்பானியும் வற்புறுத்தியிருக்கலாம், ஆனாலும் சென்னைக்கு ஓடி வர முக்கிய காரணம் தமிழ்நாட்டில் இத்துறையில் இருக்கும் திறன் வளம் தான்.
சென்னையில் SES நிறுவனத்தின் உலக திறன் மையம் அமைவது, தமிழ்நாட்டில் தொழில்நுட்பத் துறைக்கும், ஸ்பேஸ்டெக் துறையின் வளர்ச்சிக்கு உதவும். இந்தியாவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். செயற்கைக்கோள் தொடர்புத் துறையில் இந்தியா மேலும் வளர்ச்சியடைய வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications