சென்னை: தமிழகத்தில் ஆடம்பர கார் விற்பனை கடந்த ஆண்டை விட அதிரடியாக உயர்ந்துள்ளது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாநில போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, 2023-24ம் நிதியாண்டில் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான விலையுள்ள 8,475 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022-23ம் ஆண்டின் 5,797 கார்களை விட சுமார் 46.2% அதிகமாகும். இதில் என்ன இருக்கும் என்று உங்களுக்கு தோன்றலாம். மிகப்பெரிய விஷயம் இருக்கு.
இந்திய சந்தை எப்போதும் பட்ஜெட் சந்தையாகும், இந்தியாவில் ஒரு பொருட்களை விற்க வேண்டுமெனில் அதிகப்படியான போட்டி, விலை வித்தியாசத்தில் போராட்டம் என பல பிரச்சனை இருக்கும். இப்படியிருக்கும் சந்தையில் ஆடம்பர பொருட்களுக்கான டிமாண்ட் சமீபத்தில் அதிகரித்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் மிடில் கிளாஸ் மக்கள் அதிகளவில் அப்பர் மிடில் கிளாஸ் ஆகவும், பெரும் பணக்காரர்களாக உயர்ந்துள்ளது தான்.

இதேபோல் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆடம்பர கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ்-பென்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் போன்ற பிராண்டுகள் ஆடம்பர கார்களுக்கு பெயர் பெற்றவை. தமிழகத்தில் பிஎம்டபிள்யூ கார்களின் விற்பனை தான் அதிகம். அதனைத் தொடர்ந்து மெர்சிடிஸ்-பென்ஸ், ஜாகுவார்-லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்), போர்ஷே, ஆடி ஆகியவை உள்ளன.
சென்னையில் அதிக ஆடம்பர கார் விற்பனை:
தமிழகத்தில் சென்னையில் அதிகளவில் ஆடம்பர கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 1,668 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் 510, மதுரை 110, திருநெல்வேலி 95, திருச்சி 65 ஆகிய இடங்களில் அதிகளவில் ஆடம்பர கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பொருளாதார வளர்ச்சி, அதிகரிக்கும் வருமானம், இளம் தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் ஆடம்பர கார் விற்பனை அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக வருமானம் உள்ளவர்கள் அதிகம் வசிப்பதால் ஆடம்பர கார் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.
இந்த போக்கை கருத்தில் கொண்டு ஆடம்பர கார் உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டுச் சந்தையை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனர். புதிய மாடல்கள், தள்ளுபடிகள் போன்றவற்றை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கான போட்டிக் களமாகத் தமிழகம் மாறி வருகிறது.
இதனால் ஒருபுறம் அரசுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைத்தாலும், மறுபுறம் போக்குவரத்து நெரிசல், சாலை பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த போக்கைக் கருத்தில் கொண்டு அரசு திட்டமிட வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications