லண்டன்: லண்டனில் விலை உயர்ந்த வீடுகளின் விற்பனை சரிவை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனமான நைட் பிராங்க் நிறுவனம் லண்டனில் ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 12 மாத காலத்தில் லண்டனில் 13.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்பு கொண்ட வீடுகளின் விற்பனை கணிசமான அளவு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 110 கோடி ரூபாய் ஆகும். 2022-23 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாடு கணிசமான அளவு வீடுகளின் விற்பனை குறைந்துள்ளது.

குறிப்பாக 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 10 வீடுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறதாம். இதுவே கடந்த ஆண்டில் 38 வீடுகள் விற்பனையானதாக இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
கடந்த 2022-23 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-24 ஆம் ஆண்டில் வீடுகளின் விற்பனை லண்டன் நகரில் 4.3 பில்லியன் பவுண்டில் இருந்து 2.7 பில்லியன் பவுண்டுகளாக சரிவடைந்துள்ளது. குறிப்பாக மத்திய லண்டன் பகுதியில் வீடுகளின் விற்பனை கணிசமான அளவு சரிந்துள்ளதாக இங்கே இயங்கி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.
வங்கி வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பது, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவையும் மக்கள் லண்டனில் வீடுகளை வாங்குவதற்கு தயக்கம் காட்ட காரணமாக சொல்லப்படுகிறது. கூடிய விரைவில் பிரிட்டன் நாட்டில் புதிதாக அமைந்துள்ள அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு வரிகளை உயர்த்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பட்ஜெட் அறிவிப்புக்கு பின்னர் வீடுகளை வாங்கலாம் என்ற மனநிலையில் மக்கள் இருப்பதாக இங்கே செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. அரசை பொருத்தவரை அங்கே தங்கியிருக்கக்கூடிய சுமார் 74,000 தனிநபர்கள் பிரிட்டன் அல்லாமல் வெளியிடங்களில் அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.
ஆனால் அதற்கு தற்போது வரி விதிக்கப்படுவது கிடையாது. கூடிய விரைவில் வரக்கூடிய பட்ஜெட்டில் இது போன்ற வெளிநாடுகளில் அதிக வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு வரி விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே பட்ஜெட் தாக்கல் வரை காத்திருக்கலாம் என பலரும் எண்ணுவதாக சொல்லப்படுகிறது.
தற்போது லண்டனில் ஆடம்பர வீடுகளின் விற்பனை குறைந்து இருப்பதால் வீடு விற்பனை செய்யும் நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலையை குறைத்து இருப்பதாக கூறுகின்றனர். எனவே வீடு வாங்க எண்ணுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரியல் எஸ்டேட் துறையை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications