அதிகரித்து வரும் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் மற்றும் வட்டி உயர்வு ஆகியவை காரணமாக பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்று தனது 683 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிஃப்ட் நிறுவனம்
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா என்ற பகுதியில் அமைந்துள்ள லிஃப்ட் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவது, உணவு விநியோகம் உள்பட பல சேவைகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. கனடாவிலுள்ள சில நகரங்களிலும் இந்நிறுவனம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைநீக்கம்
இந்தநிலையில் லிஃப்ட் நிறுவனம் தனது 13 சதவீத ஊழியர்கள் அல்லது 683 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் செலவுகளை குறைக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்கட்டமாக தங்களது நிறுவனத்தின் 13 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி செலவுகளை குறைக்க மேலும் சில நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் லிஃப்ட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மறுசீரமைப்பு
இந்த பணி நீக்க நடவடிக்கை காரணமாக 27 மில்லியன் டாலர் முதல் 32 மில்லியன் டாலர் வரை தங்களது நிறுவனத்திற்கு செலவு மிச்சமாகும் என்றும் அந்த பணத்தை வைத்து நிறுவனத்தின் மறுசீரமைப்பு தொடர்பான செலவுகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் லிஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இழப்பீடு
2022 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய பணியாளர்கள்
கடந்த செப்டம்பர் மாதம் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் காரணமாக லிஃப்ட் நிறுவனம் ஏற்கனவே புதிய பணியாளர்களை பணியில் அமர்த்துவதை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில நிறுவனங்கள்
லிப்ட் நிறுவனம் மட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களும் வேலைநீக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நிச்சயமற்ற பொருளாதாரம் காரணமாக அமெரிக்காவை தளமாக கொண்ட பல நிறுவனங்கள் புதிதாக பணியாளர்களை பணியில் அமர்த்தும் முடிவை கைவிட்டு விட்டன என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications